கோலாலம்பூர் — நேப்பாளத் தொழிலாளர்களை மலேசியாவுக்கு தருவிப்பதில் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இதன் தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி மறு ஆய்வு செய்ய நேப்பாளம் முன்வந்துள்ளது.
இதன் மூலம் நேப்பாளத் தொழிலாளர்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதோடு, அவர்களுக்கான பணி தொடர்பான விதிமுறைகள், அவர்களைத் திருப்பி அனுப்புவது போன்ற அம்சங்களும் தெளிவாகக் குறிப்பிடப்படும் என நேப்பாள அயலக விவகாரங்களுக்கான மலேசியப் பொறுப்பாளர் குமார் ராஜ் கேரல் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் நேப்பாளத் தொழிலாளர்கள் விவகாரத்தை இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் விவாதிக்கும் என மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் அறிவித்துள்ளார்.
இடைத் தரகர் நிறுவனங்களால் நேப்பாளர் தொழிலாளர்கள் பல்வேறு தொல்லைகள் அனுபவிக்கின்றனர் என அடுக்கடுக்காகப் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜூன் 20 வரையில் குடிநுழைவுத் துறை அனுமதித்துள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1,747,154 ஆகும். இதில் 378,577 தொழிலாளர்கள் நேப்பாளத்தைச் சேர்ந்தவர்கள். மலேசியாவில் அதிகமான அந்நியத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தோனிசியா திகழ்கிறது. இரண்டாவது நிலையில் நேப்பாளம் இருக்கிறது.