தவாவ், மே 11 – தன்னைப் பற்றி முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் கூறும் கடும் விமர்சனங்களை இத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருந்த நடப்பு பிரதமர் நஜிப் துன் ரசாக், நேற்று முதல் முறையாக மகாதீருக்கு எதிரான தனது பதிலடியை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 1987-ம் ஆண்டு அம்னோ தலைவர் பதவியை கிட்டதட்ட இழக்கும் நிலையில் இருந்த மகாதீருக்கு தான் பக்கபலமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள நஜிப், தற்போது அம்னோவில் நிலவும் கடினமான சூழ்நிலையில், மகாதீர் பதிலுதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சபா மாநிலத்தில் உள்ள தவாவில் நேற்று நடைபெற்ற பேரணியில் சுமார் 40,000 ஆதரவாளர்கள் முன்னிலையில் நஜிப் கூறியிருப்பதாவது:
“கடந்த 1987-ம் ஆண்டு, மகாதீருக்கு ஆதரவளித்து பக்கபலமாக நானும் செயல்பட்டேன். அவ்வளவு கடினமான சூழ்நிலைக்குப் பின்னரும் அவர் எப்படி பிரதமராக தொடர்ந்தார்? காரணம் அந்த சூழ்நிலையை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.”
“அவர் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்ட போது நாங்கள் அவருக்கு தோள் கொடுத்தோம். அந்த நேரத்தில் நாங்கள் ஆதரவு தரவில்லை என்றால், மகாதீரால் பிரதமராக 22 ஆண்டுகள் பதவி வகித்திருக்க முடியாது.”
“எனவே அதையெல்லாம் மகாதீர் மறந்து விடக்கூடாது. தற்போது அவரால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருந்தால் போதும்” என்று நஜிப் கூறியுள்ளார்.
நஜிப்பின் இதை கூறியவுடன், அங்கிருந்த ஆதரவாளர்கள் “நஜிப், நஜிப்” என்று கோஷமிட்டதாக பெர்னாமா கூறியுள்ளது.
மேலும், தனக்கு கட்சி உறுப்பினர்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தால் மட்டுமே அதை கருத்தில் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள நஜிப், இன்று வரை கட்சியும், மக்களும் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.