கோலாலம்பூர், மே 11 – நோக்கியா நிறுவனத்தை வாங்கிய பிறகு மைக்ரோசாப்ட், நோக்கியாவின் விற்பனையகங்களை பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதன்படி, ஆசிய அளவில் முதல் மைக்ரோசாப்ட் விற்பனையகம் நேற்று முன்தினம் மலேசியாவில் திறக்கப்பட்டது.
‘மைக்ரோசாப்ட் ப்ரையாரிட்டி ரீசெல்லர்’ (Microsoft Priority Reseller) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விற்பனையகம், நேற்று முன்தினம் கோலாலம்பூரில் உள்ள பிரபல வணிக வளாகமான சூரியா கேஎல்சிசி-ல் திறக்கப்பட்டது. இந்த விற்பனையகத்தில், மைக்ரோசாப்ட்டின் மென்பொருட்கள், லூமியா திறன்பேசிகள் மற்றும் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் டேப்லெட்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.
மைக்ரோசாப்ட்டின் விற்பனையகம் புதிதாக திறக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மைக்ரோசாப்ட் திறன்பேசிகளை வாங்கும் முதல் 50 நபர்களுக்கு இலவசமாக ‘மான்ஸ்டர் ஹெட்செட்’ (Monster headset) கருவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் பல பரிசு சீட்டுகளும், சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டிற்குள் மலேசியாவில் 16 ப்ரையாரிட்டி ரீசெல்லர் விற்பனையகங்களை உருவாக்குவதே மைக்ரோசாப்ட்டின் இலக்கு என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா அல்லாமல் மைக்ரோசாப்ட் தனது விற்பனையகங்களை மலேசியா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மட்டும் தற்போது திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.