சீனாவில் கடந்த 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டைன்ஸ் குழுமம் இணைய வர்த்தகம், சுற்றுலா, வணிகம் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு தொழில்களைச் செய்து வருகின்றது. அந்நிறுவனத்தில் சுமார் 12,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தங்கள் 20-ம் ஆண்டு நிறைவை பாரிஸில் கொண்டாடத் திட்டமிட்டது.
இந்த நான்கு நாட்கள் சுற்றுலா மூலம், தனது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டிற்கும் ஜின்யுவான் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நான்கு நாட்களில் மட்டும் டைன்ஸ் நிறுவனம், தங்கள் ஊழியர்களின் இருப்பிடத்திற்காகவும், உணவிற்காகவும் சுமார் 10 மில்லியன் யூரோக்களை செலவு செய்ய இருக்கிறது. சற்றே பொருளாதார சரிவை சந்தித்து வரும் பிரான்ஸிற்கு, இந்த ஒரு சுற்றுலா மூலம் ஜின்யுவான், பெரிய ஆறுதலை ஏற்படுத்தி உள்ளார் என தேசிய பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுலாவில் மற்றுமொரு சாதனையாக தனது ஊழியர்களைக் கொண்டு பிரஞ்சு ரிவியரா பகுதியில் டைன்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள நீண்ட வார்த்தை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
ஏற்கனவே போர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பிடித்து பெரும் புகழ் பெற்றுள்ள லீ ஜின்யுவான், தனது ஊழியர்களுக்கு அளித்துள்ள இந்த இன்ப அதிர்ச்சி மூலம் மேலும் புகழடைந்துள்ளார். இதற்காக அவர் செலவழித்த மொத்த தொகை, 24 மில்லியன் யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.