Home நாடு “மஇகா விவகாரங்களில் சாமிவேலு தலையிடக் கூடாது – தூதர் பதவியிலிருந்து விலக வேண்டும்” – பழனிவேல்

“மஇகா விவகாரங்களில் சாமிவேலு தலையிடக் கூடாது – தூதர் பதவியிலிருந்து விலக வேண்டும்” – பழனிவேல்

932
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 11 – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவுக்கும், நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

G-Palanivel1

மஇகா விவகாரங்களில் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு தேவையின்றித் தலையிடுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் குற்றம்சாட்டி உள்ளார். தனது தலைமைத்துவத்திற்கு எதிராக பலரை தூண்டிவிடுவதும் அவர்தான் என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில் தன்னை அரசியலில் உருவாக்கி உன்னத நிலைக்குக் கொண்டுவந்த சாமிவேலுவை பழனிவேல் கடுமையாகச் சாடி உள்ளார்.

சாமிவேலுவின் காலம் முடிந்து விட்டது

Samy-Vellu“அவர் (சாமிவேலு) பதவியிலிருந்து விலகிவிட்டார். எனவே அவர் இனிமேல் விலகி நிற்க வேண்டும். இந்தியச் சமுதாயம் அவருக்கு ஏறத்தாழ 30 ஆண்டுகால அவகாசம் அளித்துவிட்டது, அதுவே போதுமானது. இச்சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் உயர மேலும் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை என் வழியில் செய்ய அவர் வழிவிடவேண்டும்” என்று பழனிவேல் கூறியுள்ளார்.

“இது என் கருத்தல்ல. இதற்குரிய ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு தலைவருக்கும் வெவ்வேறு விதமான தலைமைத்துவ பாணி உள்ளது. அவருக்கென ஒரு வழிமுறை உள்ளது போல் எனக்கும் எனது பாணி உள்ளது. நாட்டிலுள்ள இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு என்னை அனுமதிக்க வேண்டிய தருணம் இது. மஇகா தலைவராக பதவி வகித்து வரும் இந்தக் குறுகிய காலகட்டத்தில், கடந்த 30 ஆண்டுகளாக இந்தியச் சமுதாயத்துக்கு சாமிவேலு செய்ததைவிட நான் அதிகமாகச் செய்துள்ளேன். இந்தியச் சமுதாயத்திற்காக தாம் செய்ததாக அவர் குறிப்பிடும் அனைத்தையுமே அவர் தனக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்” என்றும் பழனிவேல் கடுமையாகக் குறை கூறியுள்ளார்.

“மஇகாவின் அரசியல் சாசனத்தை சாமிவேலு நன்கறிவார். எனவே எம்ஐஈடி மற்றும் ஏய்ம்ஸ்ட் ஆகியவற்றை அவர் மஇகாவிடம் ஒப்படைப்பதுடன், இவற்றில் அவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்தும் விலக வேண்டும். இன்னமும் கூட அவர் அந்தப் பொறுப்புகளில் நீடிக்க என்ன காரணம், அவரது உண்மையான நோக்கமென்ன?” என்றும் பழனிவேல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒருகாலத்தில் சாமிவேலுவுக்கு நெருங்கிய அரசியல் சகாவாகவும், வாரிசாகவும் கருதப்பட்ட பழனிவேல் எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் உருவாக்கங்களில் ஆரம்ப காலம் முதல் சாமிவேலுவுடன் இணைந்து செயல்பட்டார்.

ஒரு கட்டத்தில் எம்ஐஇடி வாரியத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்ட அவர் தேசியத் தலைவரான பின்னர் அந்தப் பதவியிலிருந்து இயக்குநர் வாரியப் பதவியிலிருந்தும் விலகினார்.

இருப்பினும் இன்னும் எம்ஐஇடியின் உறுப்பினர்களில் ஒருவராக தொடர்ந்து நீடித்து வருகின்றார்.

“தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் பதவியில் இருந்தும் சாமிவேலு விலக வேண்டும். அவர் அப்பதவியை ஏற்றது முதற்கொண்டு மலேசியாவுக்கு எத்தகைய தொழில் வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளார்?” என்றும் பழனிவேல் கேள்விக் கணை தொடுத்துள்ளார்.

“சிறப்புத் தூதருக்குரிய பணிகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மஇகா விவகாரங்களில் அவர் தலையிடுகிறார். மேலும் எனக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிடுகிறார். எனக்கு எதிராகச் செயல்படுபவர்களை தூண்டிவிடும் மறைமுக கரமாக அவர் இருப்பது வெளிப்படையான ஒரு ரகசியம்,” என்று பழனிவேல் தமது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

சாமிவேலு தூதர் பதவியை விட்டு விலக்கப்பட வேண்டும் என்று கூறும் அளவுக்கு, இருவருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையிலான பிளவு என்றுமில்லாத அளவுக்கு ஒரு மோசமான கட்டத்தைத் தற்போது எட்டியுள்ளது.