ஜெய்ப்பூர், மே 11 – பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில், பகத்சிங் குறித்து காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
துஷார் காந்தி, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகனான மணிலால் காந்தியின் பேரனாவார். இவர் சமீபத்தில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது, மகாத்மா காந்தி, பகத்சிங்கின் மரண தண்டனையை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பது குறித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர், “பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பகத்சிங் ஒரு குற்றவாளி. அதன் காரணமாகத் தான், மகாத்மா காந்தி அவரது தண்டனை குறைப்பிற்காக ஆங்கிலேயர்களிடம் முறையிடவில்லை” என்று தெரிவித்தார்.
பகத்சிங் குறித்து துஷார் காந்தியின் கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர் மீது தன்னார்வ அமைப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்திய சுதந்திர போராட்டக் காலத்தில், லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டதற்கு பலி வாங்கும் விதமாக, சாண்டர்ஸ் என்ற ஆங்கிலேயரை பகத்சிங்கும் அவரது கூட்டாளிகளும் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை அங்கீகரிக்கும் ஒப்பந்தத்தில் மகாத்மா காந்தி கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.