Home வணிகம்/தொழில் நுட்பம் பில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்?

பில் கேட்ஸ் விவாகரத்து : சொத்துகளை எப்படிப் பிரிப்பார்கள்?

829
0
SHARE
Ad

வாஷிங்டன் : விவாகரத்துகள் இப்போதெல்லாம் புதியதல்ல! அதுவும் பிரபலங்களின் விவாகரத்துகள், சினிமா நட்சத்திரங்களின் பிரிவுகள் எப்போதுமே ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும்.

அதே போன்றுதான் பில்கேட்ஸ் விவாகரத்தும் கடந்த சில நாட்களாக ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றது. 27 வருடங்களாகத் தொடர்ந்த மெலிண்டா கேட்சுடனான அவரின் தாம்பத்தியம் ஒரு முடிவுக்கு வருவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பல அறப்பணிகளை அவர்கள் இருவரும் இணைந்தே செய்து வந்தார்கள். அவர்களின் அந்தப் பணிகள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தங்களின் சொத்துகளில் பெரும்பகுதியை அவர்கள் அறப்பணிகளுக்கு வழங்கப் போவதாக மற்றொரு உலகப் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட்டுடன் இணைந்து அவர்கள் 2010-ஆம் ஆண்டிலேயே உறுதியளித்தனர்.

#TamilSchoolmychoice

அந்த உறுதிமொழியை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பில் கேட்ஸ் – மெலிண்டா கேட்ஸ் இடையிலான விவாகரத்து வாஷிங்டன் மாநிலத்தில் இருதரப்புக்கும் ஒப்புக் கொண்ட ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அவர்களுக்குள் சொத்துகளைப் பிரிப்பதில் பிரச்சனையோ முரண்பாடோ  இருக்காது. காரணம் ஏராளமான சொத்துகள் இருப்பதால், யாருக்கும் குறைவாகக் கிடைக்கவோ, பற்றாக்குறையாவதற்கோ வாய்ப்பில்லை.

பில் கேட்ஸ் தம்பதியருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்களுக்கும் சொத்துகளில் ஒரு பகுதி சென்று சேரும். அதன் மூலம் அவர்களும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெறுவார்கள்.

மே 2021 வரை பில் கேட்ஸ் சொத்து மதிப்பு 145 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே சொத்துகளைப் பாதியாகப் பிரித்துக் கொண்டாலும், ஒருவருக்கொருவர் கூடுதலாக விட்டுக் கொடுத்தாலும், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய சொத்துகளின் மதிப்பு மிக அதிகமாகவே இருக்கும்.

ஆளுக்குப் பாதி என்றாலும் ஒருவருக்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். அதாவது 70 ஆயிரம் மில்லியன் டாலர்கள். ஓர் அமெரிக்க டாலர் இன்றைய மதிப்பில் மலேசிய ரிங்கிட் 4.12 ஆகும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் நீங்களே கணக்குப் பொறியின் மூலம் அந்த சொத்துகளின் மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல!

பிரிக்கப்படவிருக்கும் இந்த சொத்துகளைத் தவிர்த்து அவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் மைக்ரோசோப்ட் போன்ற நிறுவனங்களிடம் இருந்து அவர்களுக்குத் தொடர்ந்து பங்குகளுக்கான இலாப ஈவும் கிடைத்துக் கொண்டிருக்கும்.