Home இந்தியா பிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்

பிரசாந்த் கிஷோர் : இந்திய சட்டமன்றத் தேர்தல் வெற்றிகளின் கதாநாயகன்

609
0
SHARE
Ad

(நடந்து முடிந்த இந்தியாவின் 5 சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது அனைத்து ஊடகங்களின் பார்வையும் ஒருங்கே பதிந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது பிரசாந்த் கிஷோர் என்ற தேர்தல் வியூக வகுப்பாளர்தான். எந்தக் காரணங்களால் அவர் தேர்தல் முடிவுகளின் கதாநாயகனாக மாறினார் என்பதை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர், இரா.முத்தரசன்)

இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2 ) வெளியிடப்பட்டன. பிற்பகலுக்குள் எந்தக் கட்சிகள் எந்த மாநிலத்தில் முன்னணி என செய்திகள் வெளிவரத் தொடங்கிய தருணம்.

வட இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் நேர்காணலுக்காக தேடி அலைந்த நபர்,

#TamilSchoolmychoice

மு.க.ஸ்டாலினோ, மம்தா பானர்ஜியோ, பினராய் விஜயனோ அல்ல!

பிரசாந்த் கிஷோர் என்ற தேர்தல் வியூக சூத்திரதாரியைத்தான் வட இந்திய தொலைக்காட்சிகள் இறுதியில் திரைக்குக் கொண்டு வந்து கொண்டாடின.

ஆம்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் கதாநாயகனாக உருவெடுத்திருப்பவர் பிரசாந்த் கிஷோர்.

மூன்று காரணங்களால் அவர் ஊடகங்களாலும், அரசியல் பார்வையாளர்களாலும் கொண்டாடப்பட்டார்.

தமிழ் நாட்டில் வெற்றி வாகை சூடிய ஸ்டாலின் மே 5-ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்தபோது…

முதலாவது, அவரின் ஐ-பேக் (i-Pac) நிறுவனம் தேர்தல் வியூகம் வகுத்துத் தந்த திமுக தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகை சூடியது.

இரண்டாவது, இதே காலகட்டத்தில் நடைபெற்ற மேற்கு வங்காளத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களில் பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் அமைத்துத் தந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளுடன் அபார வெற்றி பெற்றது.

மூன்றாவது காரணம், மேற்கு வங்காளத்தில் பாஜக 100 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறாது என பிரசாந்த் கிஷோர் சூளுரைத்தபடி 77 தொகுதிகளுடன் பாஜக முடங்கிப் போனது.

2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 தொகுதிகளை மட்டுமே மேற்கு வங்காளத்தில் வென்ற பாஜக, இந்த முறை 77 தொகுதிகளைக் கைப்பற்றியது விஸ்வரூப அரசியல் வளர்ச்சிதான்.

என்றாலும், 100-ஐத் தாண்டாது என்ற பிரசாந்த் கிஷோரின் கணிப்புதான் – இவ்வளவு சரியாகக் கணித்திருக்கிறாரே – என இறுதியில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதைவிட முக்கியமாக அப்படி பாஜக 100 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி கண்டால் நான் எனது தேர்தல் வியூகத் தொழிலையே விட்டு விடுவேன் என்று தன்னம்பிக்கையோடு சவால் விட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர்.

அவரின் அந்த வாக்குறுதி உண்மையாகுமா எனக் காத்திருந்தன அரசியல் கட்சிகளும், ஊடகங்களும்! நாமும் கடந்த வாரத்தில் பிரசாந்த் கிஷோரின் இந்த சவால் குறித்து மக்கள் ஓசை கட்டுரை ஒன்றில் விவரித்திருந்தோம்.

தேர்தல் வியூகத் தொழிலைக் கைவிடுவதாக அறிவித்த பிரசாந்த் கிஷோர்

தேர்தல் முடிவுகள் வெளியான மே 2-ஆம் தேதி மாலையில் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய பிரசாந்த் கிஷோர் இந்த தேர்தல் வெற்றிகளோடு தேர்தல் வியூகத் தொழிலைக் கைவிடுவதாக அதிரடியாக அறிவித்தார்.

அனைவருக்கும் ஆச்சரியம்!

“உங்களின் கணிப்புதான் (பாஜக மேற்கு வங்காளத்தில் 100 தொகுதிகளைத் தாண்டாது) பலித்து விட்டதே பின்னர் ஏன் தொழிலைக் கைவிடுகிறீர்கள்?” நேர்காணல் நடத்தியவர்கள் கேள்விக் கணை தொடுத்தனர்.

“கடவுளின் கருணையால் நான் வெற்றிகளைப் பெற்ற பின்னர் இந்தத் தொழிலை இந்த இடத்தில் கைவிடுவதுதான் சரியாக இருக்கும். எனினும் எனது நிறுவனம் தொடர்ந்து தேர்தல் வியூகப் பணிகளை மேற்கொள்ளும். சிறந்த நிபுணர்கள் எனது நிறுவனத்தில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து பணியாற்றி நிறுவனத்தை நடத்தி வருவர். ஆனால் நான் இந்தத் தொழிலை விட்டு விட்டு வேறு ஏதாவது செய்ய உத்தேசித்துள்ளேன்” என பதிலளித்தார் பிரசாந்த் கிஷோர்.

“நான் இந்தத் தொழிலுக்குள் திட்டமிட்டு விரும்பி வரவில்லை. நீண்ட காலமாக இந்தத் தொழிலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது குறித்து யோசித்து வந்தேன். வெற்றிகள் பெற்றிருக்கும் இந்த சூழ்நிலையே அதற்கான சரியான தருணம் எனக் கருதுகிறேன்” எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார் பிரசாந்த் கிஷோர்.

தற்போதைக்கு தனது குடும்பத்தினரும் ஓய்வெடுக்கப் போகிறேன் என அறிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர் நேரடி அரசியலில் ஈடுபடுவாரா?

தேர்தல் வியூகங்கள், உத்திகளின் மன்னன் எனத் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் பிரசாந்த் கிஷோர். அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் மக்கள்.

பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். நேரடி அரசியலில் ஈடுபடத் தனக்கு ஆர்வம் இருப்பதாக பலமுறை கூறியிருக்கிறார்.

மிகவும் பின்தங்கிய அந்த மாநிலத்தின் அரசியலில் ஈடுபடுவாரா என்பது குறித்து அவர் எதையும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. 2020-இல்தான் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இனி அடுத்த தேர்தல் 2025-இல்தான்.

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் 2024-இல்தான் நடைபெறும்.

இப்போதைக்கு பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுத்துப் போராடும் ஆற்றலாளர் என்பதை நிரூபித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். நரேந்திர மோடி, அமித் ஷா என்ற இருபெரும் அரசியல் புலிகளையே மேற்கு வங்காளத்தில் சவால் விட்டு மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார்.

எனவே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியல் களத்தில் ஏதாவது ஒரு வடிவத்தில் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கலாம். ஏதாவது ஒருவிதத்தில் தனது வியூகங்களால் தேர்தல் களத்திலும், முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதை அவர் ஒவ்வொரு முறையும் நிரூபித்திருக்கிறார்.

அவருக்கு வயது 44-தான்! எனவே, ஒரு நீண்ட அரசியல் பயணத்துக்கான – போராட்டத்துக்கான – பாதை அவர் முன்னே நீண்டு கிடக்கிறது.

பின்னணியில் இருந்து அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் வியூக ஆலோசகராக சாதனை படைத்த அவர் நேரடி அரசியலிலும் ஈடுபட்டு தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துவாரா?

ஆவலுடன், ஆர்வத்துடன், காத்திருக்கின்றனர், இந்தியப் பொதுமக்களும், அரசியல்வாதிகளும்!

-இரா.முத்தரசன்