நியூயார்க், மே 25 – அமெரிக்காவின் கணித மேதையும் நோபல் பரிசு பெற்றவருமான ஜான் நாஷ் (86) நேற்று முன்தினம் நியூ ஜெர்சியில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் பலியானார். இந்த விபத்தில் அவருடன் பயணித்த அவரது மனைவி அலிசியா நாஷும் (82) பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணித மேதையான நாஷ், விளையாட்டு கோட்பாடுகளில் கணிதத்தை புகுத்தியதில் பெரும் புகழ்பெற்றார். கடந்த 1994-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல்பரிசை பெற்ற இவர், கணிதத்துறையின் மிகவும் உயரிய பரிசான ‘அபேல்’ (Abel) விருதினையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நார்வேயில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது மனைவியுடன் கார் ஒன்றில் நியூ ஜெர்சி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் இறந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இது பற்றி மேலும் தகவல்களை அளிக்க நியூ ஜெர்சி காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.
ஜான் நாஷின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ’எ பியூட்டுபுல் மைன்ட்’ (A Beautiful mind) என்ற திரைப்படத்தில், நாஷ் விளையாட்டுக் கோட்பாடுகளில் கணிதத்தை புகுத்தியதை மிகச் சிறப்பானதாக காட்சிபடுத்தி இருப்பர். வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்ற அந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.