Home நாடு நாட்டிய விமர்சனம் : கிருத்திகாவின் ‘ஹம்ஸ நிருத்தியம்’ (படங்களுடன்)

நாட்டிய விமர்சனம் : கிருத்திகாவின் ‘ஹம்ஸ நிருத்தியம்’ (படங்களுடன்)

737
0
SHARE
Ad

DSC_0005கோலாலம்பூர், மே 27 – கடந்த மே மாதம் 10ஆம் தேதி குமாரி கிருத்திகாவின் ‘ஹம்ஸ நிருத்தியம்’ எனும் நாட்டிய நிகழ்ச்சி பிரிக்பீல்ட்ஸ், நுண்கலை கலாலயம் சாந்தானந்த் அரங்கத்தில்,  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

குமாரி கிருத்திகா மதுர நாட்டிய மாமணி திருமதி குருவாயூர் உஷா அவர்களின் திருமகளாவார். புலிக்குப் பிறந்தது நிச்சயம் புலிதான் என்பதை இந்த 17 வயதிலேயே நாம் பார்த்த இந்நிகழ்ச்சியின் வழி நிரூபித்துக்காட்டினார் கிருத்திகா.

அவர் வழங்கிய முதல் நாட்டியத்தின் பெயர் ‘ஹம்ஸ நிருத்தியம்’. அதாவது ஹம்ஸ – என்பது அன்னப்பறவை.  இது  அன்னம் என்கிற ஆன்மா இறைவனுடன் கலப்பதான நாட்டிய அமைப்பு.

#TamilSchoolmychoice

DSC_0060ஓர் அன்னத்தைப் போல் வெண்ணிற ஆடையில் துள்ளிக்குதித்து, மயக்கும் விழிகளுடன் அன்னமான தானும்  இறைவனும் ஒன்றானதாக அபிநயம் பிடித்து எல்லோரையும் வசப்படுத்தினார் கிருத்திகா. இந்த ஒரு தொடக்க நாட்டியமே மற்றவையும் மிகச்சிறப்பாக இருக்கும் எனக் கட்டியம் கூறியது.

இந்த ஹம்ஸ நிருத்திய நிகழ்ச்சிக்கு டாக்டர். மு. தர்மலிங்கம் ‘அம்ச’ எனத் தொடங்கும் ராகங்களான அம்சத்துவனி, அம்சநாதம் மற்றும் அம்சநந்தி எனும் மூன்று ராகங்களில், அம்ச மாளிகையாக பாடலுக்கு சிறப்பாக இசையமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

DSC_1176அடுத்து  பலராலும் மறக்கப்பட்ட, சங்கீத மும்மூர்த்திகளால் மிகவும் மதிக்கப்பட்ட, தமிழில் கீர்த்தனைகள் படைத்த ஊத்துக்காடு வெங்கட சுப்பையா அவர்களின்  ‘ஆனந்த நர்த்தன கணபதிம்’ எனும் கடினமான பாடலுக்கு அலாரிப்பூவை மிக நுட்பமாக சிறப்பாக ஒன்றிணைத்துத் தந்தது  மிகவும் பாராட்டுக்குரியது.

உஷாவைப் போல் தேர்ந்த ஆசிரியர்களால் மட்டுமே இது சாத்தியம். கணபதியே நேரில் வந்து ஆடுவதைப்போல் அபிநயம் செய்து அனைவரையும் கண் இமைக்காமல் ரசிக்கச் செய்தார் கிருத்திகா.

அடவுகளோடு ஜதீசுவரத்தை நுண்கலை கலாலய ஆசிரியை கனகமணி விஜயேந்திரா  நுட்பமாக அமைத்துத் தர, தனி நடனமாக நிருத்தத்தில் ஆடி நம்மை அலைக்கழித்தார் கிருத்திகா.

DSC_1209நிகழ்ச்சி நடந்த அன்று அன்னையர் தினமானதால் சிறப்பாக ‘மாதே’ எனும் கணபதி உருவான கதையை ‘தருவர்ணத்தில்’ படைத்தார்கள்.

இரு வெவ்வேறான வேகத்தில் அமைந்த ஸ்வரம், சொல்கட்டு, சாகித்தியம் கொண்ட, இருபது நிமிட நாட்டியத்தில், எட்டு நிமிடம் அதிவேகமாக தொடர்ந்து ஆடி பலத்த கைத்தட்டலைப் பெற்றார் கிருத்திகா.

தன் தாயார் திருமதி குருவாயூர் உஷா அவர்களின் நட்டுவாங்கத்தில் வர்ணத்திற்கு கிருத்திகா ஆட பார்ப்பவர்களின் இதயமும், இந்த ஆட்டத்தின் வேகம் தாங்காமல் தடுமாற, தான் மட்டும் தடுமாறாமல், தன் தாயாரின் நட்டுவாங்கத்திற்கு ஈடுகொடுத்து ஆடினார் கிருத்திகா.

DSC_1290திருக்குறளில் நட்பு  அதிகாரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஏழு குறள்களுக்கு தாள நுட்பத்துடன் லய கவிதையாக டாக்டர். மு. தர்மலிங்கம் இசை அமைத்துத் தர, அவரது தாயார் திருமதி உஷா அவர்கள் நுட்பமாக நாட்டிய அமைப்பை உருவாக்கித் தர, தன் திறமைக்கு சான்றாக அருமையாக ஆடி அனைவரையும் அசத்தினார் கிருத்திகா.

‘தொட்டு தொட்டு பேச வரான்’ எனும் பெரியசாமி தூரன் இயற்றிய நாயகன் நாயகி உறவைப்பற்றிய  பதத்தை கிருத்திகா ஆடவில்லை. மாறாக உண்மையிலேயே தன் எதிரே நாயகன் நிற்பதுபோல் அவனுடன் கிருத்திகா உரையாடியது, உறவாடியது அத்துணை அற்புதமாக இருந்தது.

DSC_1320இன்னும் சிறிது நேரம் ஆடியிருக்கலாமே எனும் எண்ணத்தை என்னைப் போல் நிச்சயம் மற்றவருக்கும்  தோற்றுவித்திருக்கும் அளவுக்கு அவ்வளவு அற்புதமாக அமைந்திருந்தது.

அவரது பார்வை வாங்கப்போகும் கைத்தட்டல்களில் இல்லை. கண்களில் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற மிகச்சிறப்பான நளினமான பார்வையை வெளிப்படுத்தி நம்மை மயக்கினார்.

மங்களம் ஆடி முடிக்குமுன் தன் தாயார் திருமதி உஷா மற்றும் அச்சுதன் சசிதரன் நாயர் தொகுப்பில்  சிவசக்தியாக உருமாறிய நாட்டியமும், தில்லானாவும்  சளைக்காமல் ஆடி முடித்தார்.

DSC_1333நிறைவாக மங்களம் எனும் நாட்டியத்திற்கு அவரது குடும்பத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற கு.சா. கிருஷ்ணமூர்த்தியின் பாடலுக்கு ஆடி இறைவனுக்கு நன்றி கூறினார்.

மேடையில் திருமதி உஷாவுடன் வாய்ப்பாட்டை பவானி லோகேஸ்வரன் பாடி அசத்த, மிருதங்கத்தில் தீபன் ஆறுமுகமும், வயலினில் ‘வாத்ய ரத்னாகர’ ஸ்ரீ அச்சுதன் சசிதரன் நாயர் அவர்களும் அனைவரின் பாராட்டையும் பெற்றனர். ஒலி,ஒளி மற்றும் அரங்க அமைப்பு அனைத்தும் சிறப்பாகவே இருந்தது.

நிகழ்ச்சியை டாக்டர். மு. தர்மலிங்கமும், ஸ்ரீவர்த்தினியும் ஒவ்வொரு பாடலைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்லி சிறப்பாக நடத்தித் தந்தனர்.

DSC_1365அடுத்தடுத்து எல்லா நாட்டியத்தையுமே சிறிதும் தொய்வில்லாமலும், சளைக்காமலும், அதே உற்சாகத்துடனும், துடிப்புடனும் கிருத்திகா மட்டுமே எப்படி முழுமையாக இரண்டரை மணி நேரம் தாக்குப்பிடித்து ஆட முடிந்தது என்பது குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

அது அவரது அர்ப்பணிப்புத் தன்மையுடன் கூடிய பயிற்சியே என்பதை நமக்கு உணர்த்தியது. இரண்டு பாடல்களுக்கொரு முறை விதவிதமாக வண்ண ஆடை மாற்றி அலங்காரத்துடன் வந்தது  திகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

DSC_1377கிருத்திகாவை உடனுக்குடன் அழகாக அலங்கரித்து அனுப்பியவர்களுக்கும் சபாஷ். இந்நிகழ்ச்சியின் வழி திரட்டப்பட்ட நிதி மலேசிய நுண்கலை கலாலயம் செய்து வரும் சமுதாயப் பணிக்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் கிருத்திகாவின் ஹம்ஸ நிருத்தியம் நாட்டிய நிகழ்வை விமர்சிக்க வார்த்தைகளே இல்லை. அற்புதம். அற்புதம்! இசை ஜாம்பவான்கள் குடும்ப வாரிசு பல படிகள் மேலேயே சாதிப்பது திண்ணம்.

தாய் எட்டடி பாய, குட்டியோ முப்பத்திரண்டு அடி பாய்ந்தார் கிருத்திகா. கிருத்திகாவின் தாயாருக்கு மட்டுமல்ல பெருமை. நமக்கும் தான்!

-சா.விக்னேஸ்வரி