புதுடெல்லி, மே 27 – தொலைத் தொடர்பு துறையில், தனது உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் தன்னை மிரட்டியதாக ‘டிராய்’ அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், ‘இந்திய மறு சீரமைப்பின் முழு கதை : 2ஜி, அதிகாரம் மற்றும் தனியார் நிறுவனங்கள், – ஒரு பயிற்சியாளர் டைரி’ (The Complete Story of Indian Reforms 2G, Power and Private Enterprise – A Practitioner’s Diary) என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார்.
இந்த புத்தகம்தான் தலைநகர் டெல்லியில் பரபரப்பாக விற்பனையாகும் புத்தகமாக உள்ளது. இதில் 2 ஜி மற்றும் ஸ்பெக்ரம் விவகாரம் குறித்து வெளிவராத பல முக்கிய தகவல்களை அதில் தெரிவித்துள்ளார்.
அதில், திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், ஒளிபரப்பு நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்பதால், அவரை தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் எனது எதிர்ப்பை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.
இதனால், ஆவேசம் கொண்ட தயாநிதி மாறன், என்னிடம் தொலைத் தொடர்புத்துறை சார்ந்த அனைத்து முடிவுகளையும் தானே எடுப்பேன் என்றும், அதற்கு கட்டுப்படவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
பல முக்கிய வழக்கில் சிபிஐ தரப்பில் எனக்கு மிரட்டல் விடுத்தனர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சரியான முறையில், ஒத்துழைக்க வேண்டும் என்று அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கே என்னை மிரட்டினார்.
மன்மோகன்சிங் ஒப்புதலுடனேயே ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் தொலைத் தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்தியதாக பிரதீப் பைஜால் அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். இவரது இந்த குற்றச்சாட்டுக்கு தயாநிதி மாறன், மன்மோகன் சிங் ஆகியோர் பதில் கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.