புதுடில்லி – இன்று வியாழக்கிழமை புதுடில்லி பட்டியாலா ஹவுஸ் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிறப்பு நீதிமன்றம் கூடியபோது நீதிபதி ஷைனி ஒரே வரியில் தனது தீர்ப்பை வழங்கினார்.
வழக்கை நடத்திய சிபிஐ தரப்பு தங்களின் வழக்கை ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூடிய ஷைனி எனவே அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார்.
இந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள் பின்னர் நீதிபதியால் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், கலைஞரின் உறவினர் அமிர்தம், கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத் ரெட்டி ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கில் மொத்தம் 17 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்தத் தீர்ப்பினால் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு நாட்டின் முன்னணி புலனாய்வுத் துறையான சிபிஐ-க்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அதே வேளையில், தமிழக அரசியலில் மீண்டும் விசுவரூபமெடுத்து வரும் திமுகவுக்கும், அதன் செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியலில் பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.
திமுக தலைவர்களின் மீது இதுவரை இருந்து வந்த பெரும் களங்கம் ஒன்றும் துடைக்கப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இந்த 2-ஜி வழக்கின் வெற்றி இன்று நடைபெறும் தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலிலும் பிரதிபலிக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
இதற்கிடையில் தீர்ப்பு வெளியானவுடன் உடனடியாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்ப்பை வரவேற்றதோடு, இந்த வழக்கைப் பயன்படுத்தி திமுகவை அழிக்கப் பார்த்தார்கள் – ஆனால் அதில் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்றும் சாடினார்.