டோக்கியோ, மே 27 – ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தானும் உணர்ந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நஜிப் தனது டிவிட்டர் பதிவில், “அனைத்தும் நலமாக உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
(படம்: பிரதமர் நஜிப் துன் ரசாக் டிவிட்டர்)
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார் பிரதமர் நஜிப். இந்நிலையில் திங்கட்கிழமை டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் டிவிட்டரில் நிலநடுக்கம் குறித்து பதிவிட்டார் நஜிப்.
“தொழிலதிபர்களுடனான சந்திப்புக்கு முன்னர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வை என்னால் உணர முடிந்தது. தரையும் விளக்குகளும் நகர்ந்தன. எனினும் அனைத்தும் அமைதியாக உள்ளது (Alhamdulillah)” என்று நஜிப் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் டோக்கியோவில் உள்ள பேலஸ் தங்கு விடுதியில் நடைபெற்ற ஒரு வட்ட மேசை சந்திப்பில் நஜிப் பங்கேற்றதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
சுமார் 30 வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் இச்சந்திப்பில் பங்கேற்றவர்களின் கைபேசிகள் செயலிழந்தன. தங்குவிடுதியில் அபாய எச்சரிக்கை மணிகளும் ஒலித்தன.
எனினும் மலேசிய – ஜப்பான் பொருளாதார சங்கத்தின் தலைவர் மிகியோ சசாகியின் உரையை பிரதமர் நஜிப் எந்தவித அச்சமும் இன்றி தொடர்ந்து கவனித்துள்ளார்.
இந்த ஆண்டு நிகழ்ந்துள்ள முதல் நிலநடுக்கம் இது என்று டோக்கியோவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.