பெட்டாலிங் ஜெயா, மே 26 – மலேசியாவுக்குள் நுழைய ஹாங்காங் மாணவ போராளி ஜோஷ்வா வோங்குக்கு (படம்) அனுமதி மறுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை பினாங்கு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
காலை 11.55 மணிக்கு வோங் வந்த விமானம் பினாங்கு விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து அவர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
கொம்தார் அரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற இருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்ற இருந்தார் வோங். ஆனால் பினாங்கு வந்திறங்கிய அவர் உடனடியாக அடுத்த விமானத்திலேயே ஹாங்காங் திருப்பி அனுப்பப்பட்டார்.
எந்தவித காரணமும் தெரிவிக்கப்படாமலேயே வோங் திருப்பி அனுப்பப்பட்டதாக கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான சின் கே மின் தெரிவித்தார்.
பினாங்கிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஜோஷ்வா வோங் ஹாங்காங் வந்தடைந்தபோது…ஹாங்காங் விமான நிலையத்தில்…
கருத்தரங்கில் உரையாற்ற இருந்த 3 பேச்சாளர்களில் வோங்கும் ஒருவர் என்று குறிப்பிட்ட அவர், வோங் இல்லாமலேயே கருத்தரங்கு திட்டமிட்டபடி நடைபெறும் என்றார்.
18 வயதான வோங், பினாங்கு, ஈப்போ, ஜோகூரில் உரையாற்ற இருந்தார். தியான்மென் சதுக்க படுகொலை சம்பவத்தின் 26ஆவது நினைவு தினத்தையொட்டி ஜூன் 3ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவிலும் அவர் உரை நிகழ்த்த ஏற்பாடாகி இருந்தது.
மலேசியாவில் நுழைய வோங்குக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்களின் தலைவர்கள் டுவிட்டர் தளம் வழி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“வோங், ஹாங்காங்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணத்தை மலேசியா விளக்க வேண்டும். எதிர்ப்பு பேரணிகள் அதிகரிக்குமோ என்று பயமா?” என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
“நமது அரசு குறுகிய மனதுடன் இருக்கக் கூடாது. அரசு மேலும் வளர வேண்டும். வோங் ஒரு ஜனநாயக ஆதரவுப் போராளி,” என்று மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் எரிக் பால்சன் குறிப்பிட்டுள்ளார்.
படங்கள்: EPA