இந்தியர் சுப்ரதா ராயால் தொடங்கப்பட்ட சஹாரா நிறுவனம், தனது நிதிக் கொள்கைகளால் இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளிலும் பெரும் புகழ்பெற்றது. அதன் காரணமாக சுப்ரதா ராய், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துகளை வாங்கினார். அப்படி அவர் வாங்கிய சொத்துக்களில் ஒன்று தான் லண்டன் கிராஸ்வெனர் ஹவுஸ்.
இந்நிலையில் தனது முதலீட்டாளர்களிடம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக தொடங்கப்பட்ட வழக்கில் விசாரணைக்காக கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய், கடந்த ஓராண்டு காலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடன் பாக்கிகளை திருப்பி செலுத்தாததால், பேங்க் ஆப் சீனா கிராஸ்வெனர் ஹவுஸை ஏலத்தில் விட முடிவு செய்து அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த நிலையில் தான் சஹாரா நிறுவனம் மீண்டும் தனது விடுதியை பெறுவதற்கு முயற்சிகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமல்லாமல், தேவையான நிதியை சேகரித்து சுப்ரதா ராய்க்கு பிணைத்தொகை செலுத்தி அவரை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்த சாஹாரா நிறுவன செய்தித்தொடர்பாளரை பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்டனர். எனினும், அவர் இது தொடர்பாக விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.
அதேவேளையில் பேங்க் ஆப் சீனாவின் நிர்வாகத்தில் இருக்கும் கிராஸ்வெனர் விடுதியை கைப்பற்ற ‘அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அதாரிட்டி’ Abu (Dhabi Investment Authority), சீனாவின் ‘ஃபோசன் குழுமம்’ (Fosun Group) ஆகிய நிறுவனங்களும் முயற்சிப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.