புதுடெல்லி – முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி தராமல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், தன் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உச்ச நீதிமன்றம் 4 வார கால தற்காலிக விடுதலையில் (பரோலில்) செல்ல அனுமதி வழங்கியது.
முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பி தராத வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் 4-ஆம் தேதி முதல், திஹார் சிறையில் சுப்ரதா ராய் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெவில் அவரது தாய் சபி ராய் (95) வெள்ளிக்கிழமை காலை இறந்தார். இதையடுத்து, இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சுப்ரதா ராய்க்கு பரோல் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் கபில் சிபல் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி ஆகியோர் விசாரித்து, அவருக்கு 4 வார காலம் தற்காலிக விடுதலை (பரோல்) வழங்கி உத்தரவிட்டனர்.
பரோலில் வெளியே இருக்குபோது சுப்ரதா ராய் தப்பிக்க முயற்சிக்கக் கூடாது என்றும், அந்தக் காலக்கட்டத்தில் காவலர்களின் பாதுகாப்பில் அவர் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.