மணிலா – இன்று பெரும் எதிர்பார்ப்புடன் பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறுகின்றது.
இன்று காலை தொடங்கிய வாக்களிப்பு இன்று மாலை வரை தொடரும். முடிவுகள் வெளியாக சில நாட்கள் ஆகலாம். இருப்பினும், முன்னணி வகிப்பது யார் என்பது இன்றிரவு திங்கட்கிழமை தெரிவதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் துணை அதிபர், நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் மற்றும் செனட் பதவிகளுக்கான தேர்தலும், உள்ளாட்சித் தேர்தல்களும் அதிபர் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகின்றன.
நாட்டின் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண சில அதிரடித் திட்டங்களை முன்வைத்திருக்கும் காரணத்தாலும் – தனது அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும் – வாக்காளர்கள் மத்தியில், அரசாங்க எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்ட ரோட்ரிகோ டுடெர்ட்டே முன்னணி வகிப்பதாக பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள டாவோஸ் நகரில் நீண்டகாலமாக மாநகரசபைத் தலைவராக (மேயர்) பதவி வகித்து வந்துள்ள ரோட்ரிகோ நாட்டை உலுக்கி வரும் குற்றச் செயல்கள், வறுமை ஆகிய இரண்டு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு சில அதிரடியானத் திட்டங்களை முன்வைத்திருக்கின்றார்.
குற்றவாளிகளைப் பிடித்து வெட்டிப் போடுவேன் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். அவரது இத்தகைய அதிரடிப் பிரச்சாரங்களும், அந்தப் பிரச்சாரங்களில் அவர் பயன்படுத்தும் சில தகாத-கெட்ட- வார்த்தைகளும், மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
71 வயதான ரோட்ரிகோவுக்கு கடுமையாகப் போட்டி கொடுத்துக் கொண்டிருப்பவர் மார் ரோக்சாஸ் ஆவார். இவர், நடப்பு அதிபராக இருக்கும் பெனிக்னோ அக்குயினோவின் நெருங்கிய அரசியல் சகா ஆவார்.
நடப்பு அதிபர் பெனிக்னோ, முன்னாள் பெண் அதிபர் அக்குயினோவின் மகனாவார்.