புதுடில்லி, ஆகஸ்ட் 18 – உலகின் பணக்காரர்களில் ஒருவரான புருணை சுல்தான், இந்தியாவின் பிரபல கோடீஸ்வரர் சுப்ரதா ராயின் தங்கும் விடுதிகளை (ஹோட்டல்) வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளார் என தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் சகாரா குழும நிறுவனங்களின் தலைவர் சுப்ரதாராய் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் 20 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 மாதங்களாக இவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் சுப்ரதா ராயை பிணையில் (ஜாமீன்) விடுவிக்க ரூ. 10 ஆயிரம் கோடி பிணைத்தொகை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மிகப்பெரிய அளவிலான ஜாமீன் தொகையை செலுத்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள தனது தங்கும் விடுதிகளை விற்பனை செய்ய சுப்ரதாராய் முடிவு செய்துள்ளார்.
அதற்கான ஏற்பாடுகளை தனக்கு செய்து தருமாறு உச்ச நீதிமன்றத்திடம் அவர் விண்ணப்பித்திருக்கின்றார்.
சுப்ரதா ராய்
அதைத் தொடர்ந்து அவர் அடைக்கப்பட்டிருக்கும் திகார் சிறையில் ஒருசிறப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் இணையம் மற்றும் படம் பிடிக்கும் கருவிகளுடன் கூடிய கணினி வசதி செய்து தரப்பட்டுள்ளது.
அதில் இருந்த படியே அவர் தனது தங்கும் விடுதிகள் உள்ளிட்ட முக்கிய சொத்துக்களை விற்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள அவரது 3 தங்கும் விடுதிகளும் பேசி முடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
புருணை சுல்தான் வாங்க ஆர்வம்
இந்த தங்கும் விடுதிகளை மிக அதிக விலை கொடுத்து வாங்க புருணை நாட்டின் ஆட்சியாளரான சுல்தான் ஹசனால் போல்கியா முன்வந்துள்ளார் எனத் தெரிகின்றது.
சுப்ரதாராய்க்கு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிளாசா மற்றும் டீரீம் ஹோட்டல், லண்டனில் உள்ள குரோஸ்வெனர் ஆகிய 3 தங்கும் விடுதிகளை புருணை சுல்தான் விலைக்கு வாங்குகிறார்.
இந்த 3 ஆடம்பர நட்சத்திர ஓட்டல்களையும் கோடிக்கணக்கான டாலர் விலையில் வாங்குவதற்கு புருணை சுல்தான் பேரம் பேசி வருகின்றார்.
இவரைத் தவிர்த்து உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகள் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சைரல் பூனவாலாவும் இலண்டனில் உள்ள குரோஸ்வெனர் ஓட்டலை வாங்குவதற்கு விலை பேசியுள்ளார்.
அநேகமாக புருணை சுல்தானே இவரது தங்கும் விடுதிகளை வாங்குவார் என்றும், அதன்மூலம் கிடைக்கும் விற்பனைத் தொகையைக் கொண்டு, சுப்ரதா ராய் தனக்கு தேவைப்படும் பிணைத் தொகையை செலுத்தி வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலையாக முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.