கொழும்பு, ஜூன் 2 – இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். மைத்திரிபால சிறீசேனா வெற்றிபெற்று அதிபர் ஆனார். ராஜபக்சே மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.
அரசியல் அதிகாரத்தை இழந்து தவிக்கும் ராஜபக்சே எப்படியாவது மீண்டும் அரசு பதவிக்கு வரவேண்டும் என்று துடிக்கிறார். இலங்கையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் பதவிக்கு வர அவர் திட்டமிட்டுள்ளார். அவர் போட்டியிடுவாரா இல்லையா? என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது.
இந்தநிலையில், ராஜபக்சே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்று அவரது உதவியாளரும், செய்தி தொடர்பாளருமான ரொஹான் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் கூறும்போது;
“ராஜபக்சே இலங்கையை கட்டி எழுப்பி உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், தற்போது உள்ள ஆட்சியாலால், நாடு முடங்கி கிடக்கிறது. அதில் இருந்து நாட்டை மீட்க ராஜபக்சே பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளார்” என்று கூறினார்.
தற்போதைய அதிபர் சிறீசேனா சுதந்திரகட்சியின் தலைவராக உள்ளார். அதே கட்சியில்தான் ராஜபக்சேவும் இருக்கிறார். மைத்திரிபால சிறீசேனா அனுமதி கொடுத்தால்தான் ராஜபக்சே சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட முடியும்.
ஒருவேளை அனுமதி கிடைக்காவிட்டால் அவர் வேறு கட்சி தொடங்கியோ? அல்லது மாற்று கட்சியில் நின்றோ பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.