புதுடெல்லி, ஜூன் 2 – மதக்கலவரங்களை பாஜ அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், கடந்த சில மாதங்களுக்கு முன் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் பாஜவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களால், மத்திய அரசுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் மதக்கலவரங்கள், மதங்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை பாஜ அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;
“மத சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. சாதி, மத பேதமின்றி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. மதங்களுக்கு எதிரான பேச்சு, கலவரங்களை பாஜ அரசு சகித்துக் கொள்ளாது” என மோடி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;
“தலித்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலித் மக்கள் பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டுள்ளனர்”.
“ஆனால் மத்திய அரசு இதுபோன்ற சம்பங்களை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. தலித்கள் மீதான தாக்குதலை தடுக்கும் வகையில் அடுத்த மாதம் நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சோனியா காந்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.