சென்னை, ஜூன்13- தமிழ்ச் சினிமாவின் தவிர்க்க முடியாத படப்பிடிப்புத் தளமாக ஏவிஎம் ஸ்டுடியோ (படப்பிடிப்புத் தளம்) விளங்கி வருகிறது.
ஏற்கனவே, வாஹினி ஸ்டுடியோ, அருணாச்சலம் ஸ்டுடியோ,முருகாலயா ஸ்டுடியோ போன்ற சென்னையின் முக்கியமான படப்பிடிப்புத் தளங்கள் எல்லாம் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் கட்டப்பட்டுவிட்டன.
சமூக வலைதளங்களும்,தகவல் தொழில்நுட்பங்களும் வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் சினிமாத்துறை பெரிதும் நலிவடைந்து வருகிறது. மேலும், பெரும்பாலான படங்கள் வெளி மாநிலங்களிலோ வெளி நாடுகளிலோ அல்லது பிரம்மாண்டமான செட் அமைத்தோ படமாக்கப்பட்டு வருகின்றன.
அதனால், கடந்த 10 ஆண்டுகளாகப் பல திரையரங்குகளும், படப்பிடிப்புத் தளங்கும் இடிக்கப்பட்டு வேறு புதிய வியாபாரக் கட்டிடங்களாக உருமாற்றம் பெற்றுவிட்டன.
அந்த வரிசையில் இப்போது பாரம்பரியமான ஏவிஎம் ஸ்டுடியோவும் இடிக்கப்படுகிறது. ஏற்கனவே, ஏவிஎம் ஸ்டுடியோவின் பல பகுதிகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுவிட்டன.
எஞ்சிய சில பகுதிகளும் தற்போது இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறவுள்ளன.
கோடம்பாக்கம் என்றாலே எல்லோருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவும் அதன் சுற்றிவரும் உருண்டையும் தான் ஞாபகத்திற்கு வரும். அந்த அடையாளம் இனி இருக்கப்போவதில்லை;கால மாற்றத்தால் கரையப் போகிறது.