ஆந்திரா, ஜூன்13- ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் வேன் ஒன்று (van) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகியுள்ளனர்; இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர் ஒரு வாகனத்தில் திருப்பதிக்குச் சென்று விட்டு விசாகப்பட்டினம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவில், அவர்களது வேன் கோதாவரி ஆற்றைக் கடக்கும் போது திடீர் என ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நள்ளிரவு நேரம் என்பதால், வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது யாருக்கும் தெரியவரவில்லை. அதிகாலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஆற்றுக்குள் விழுந்திருந்த வாகனத்தைப் பார்த்துக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர், வாகனத்துக்குள் சிக்கிப் பலியான 8 பெண்கள் , 7 குழந்தைகள் உட்பட 21 பேரின் உடல்களை மீட்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்பாராமல் நடந்த இந்தத் துயர சம்பவத்தைக் கேள்விப்பட்ட பிரதமர், தமது டிவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.