Home கலை உலகம் வசூலில் இமாலய சாதனை படைத்து வரும் காஞ்சனா-2: 100 கோடியைத் தாண்டியது வசூல்!

வசூலில் இமாலய சாதனை படைத்து வரும் காஞ்சனா-2: 100 கோடியைத் தாண்டியது வசூல்!

886
0
SHARE
Ad

kanjana-600x300சென்னை, ஜூன் 14- காலந்தோறும் தோன்றிய இலக்கிய வடிவங்களைக் கொண்டு, தமிழ் இலக்கிய வரலாற்றைப் பலவாறாகப் பகுத்தது போல், காலநிலை மாற்றத்திற்கேற்பத் தயாரிக்கப்படும் தமிழ்ச் சினிமாவை வைத்துத் தமிழ்த் திரைப்பட வரலாற்றைப் பிரித்து விடலாம்.

ஊமைப்பட சினிமா, நாடகத்தனமான சினிமா, புராண-இதிகாச சினிமா, சமூகக் கதையம்ச சினிமா, துப்பறியும் சினிமா, பழிவாங்கும் படலச் சினிமா, காதல் கதைச் சினிமா, குடும்பக் கதைச் சினிமா, அதிரடி-அடிதடி சினிமா,நகைச்சுவைச் சினிமா, திகில் சினிமா, பேய்ச் சினிமா….இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

காலத்திற்குத் தகுந்தபடி சினிமாவின் போக்கும் மாறி வருகிறது. ஆங்கிலத்தில் இதை Trend என்று சொல்கிறார்கள். இப்போதைய trend என்னவென்று கேட்டால், பேய்ப் படங்களை எடுத்துத் தள்ளுவது தான்.

#TamilSchoolmychoice

முன்பு விட்டலாச்சாரியார் தான் பேய்ப் படங்கள் எடுப்பதில் கில்லாடியாக இருந்தார். தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே வியக்கத்தக்க பல நுட்பங்களைக் கையாண்டு ரசிகர்களைப் பயமுறுத்திய வித்தகர் அவர்.

இப்போதோ புதிதாகப் படம் எடுக்க வருகிறவர்கள் கூட பேய்ப் படம் எடுக்கத் தொடங்கி விட்டார்கள். காரணம் தொழில்நுட்ப வசதிகள்! புதுவித சுருள்படக் கருவிகள்( latest camera), கணினி வரைகலைகள் (graphics), பின்னணி இசைக் கருவிகள் ( sound effects) போன்ற எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.

அந்தத் தொழில்நுட்ப வசதிகளைத் துணையாகக் கொண்டு பேய்ப் படங்கள் எடுப்பது எளிதான காரியமாகிவிட்டது.

ஆனாலும் பேய்ப் படம் எடுக்கும் எல்லோராலும் வெற்றி பெற்றுவிட முடியவில்லை. அற்கென்று தனித் திறமை உள்ளவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதற்கான தனித்திறமை பெற்றவர் என்று ராகவா லாரன்ஸைச் சொல்லலாம். இவர் தான் தற்போதைய போக்கான பேய்ப்படப் பாணியைத் துவக்கி வைத்துப் பெரும் வெற்றி பெற்றவர்.

இவர் முதன்முதலில் எடுத்த பேய்ப் படம்’ முனி’ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ‘காஞ்சனா ‘ எடுத்தார். அது மிரட்டலும் நகைச்சுவையும் கலந்த படம்; மிகப் பெரிய வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து ‘காஞ்சனா-2 ‘எடுத்தார். இதுவும் மிரட்டலும் நகைச்சுவையும் கலந்தெடுத்த படம். இப்படம் முந்தைய இரண்டு படங்களின் வசூலையெல்லாம் முறியடித்து, வசூலில் இமாலய சாதனை படைத்து வருகிறது.

2015-ல் வேறு எந்தப் படமும் இந்தளவுக்கு வசூல் செய்யவில்லை. 50-வது நாளைக் கடந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 2015-ம் வருடம் முதன்முதலாக 100 கோடி வசூலித்த தமிழ்ப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.

இதுவரை உலகம் முழுக்க தியேட்டர் வசூலாக மட்டுமே ரூ. 108 கோடி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னமும் பல திரையங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ரூ. 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் இவ்வளவு தூரம் வசூலித்திருப்பதை ஆச்சர்யமாகப் பார்க்கிறது தமிழ்த் திரையுலகம்.