கோலாலம்பூர், ஏப்ரல் 17 – தனது இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற முயற்சியோடு களம் இறங்கி – ஆனால் இந்த முறை தோல்வி கண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
காஞ்சனாவில் இருந்த இயல்பான நகைச்சுவை, சரத்குமாரின் வித்தியாசமான திருநங்கை வேடம், அந்த சம்பவங்களுக்குள் ஒளிந்திருந்த அழுத்தமான செய்தியோடு கூடிய சமூகப் பார்வை – இப்படி எதுவுமே இல்லாமல், வெறும் இருட்டையும் – பயமுறுத்தல் காட்சிகளையும் மட்டுமே வைத்து படத்தை முக்கால் வாசி நகர்த்துகிறார் லாரன்ஸ்.
இறுதிக் கால்வாசி மட்டுமே கொஞ்சமாகக் கதை. அதிலும் மீண்டும் லாரன்ஸ் என்று வரும் போது போரடிப்பதோடு, சொல்லப்பட்டிருக்கின்ற கதையும் பல படங்களில் பார்த்த அதே பழங்காலத்து காதலும் கொலையும் கலந்த கதைதான்.
கதைக்களம்
கடவுளைப் பற்றி தொடர் ஒன்றை எடுத்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பார்வையாளர்கள் தேர்வில் (டிஆர்பி ரேட்டிங்) முதலிடத்தைப் பெற, அதனால் முதலிடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு இறங்கும் சுகாசினியில் கிரீன் டிவி என்ற தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் முதலிடத்தைப் பெற திட்டமிடுகின்றது.
தொலைக்காட்சி இயக்குநரான தாப்சி, அவர்கள் கடவுளைப் பற்றி எடுத்தால் நாம் பேயைப் பற்றி எடுப்போம் என ஆலோசனை தர, அதிரடியாக பேய்கள் நடமாடுவதாக ஒரு கடற்கரைப் பங்களாவைப் படம் பிடிக்கப் போகிறது படக் குழு.
தாப்சியைக் காதலிக்கும் ஒளிப்பதிவாளர் ராகவா லாரன்ஸ் அந்தப் படக் குழுவில் இணைந்து கொள்கின்றார்.
பேய் இருப்பதாக பங்களாவைக் காட்ட படக் குழு முற்பட, உண்மையிலேயே பேய் ஆக்கிரமித்துள்ள பழைய பங்களா அது எனப் பின்னர் தெரிய வர, அதைச் சுற்றி கதைக்களமும் விரிகின்றது.
முன்வந்த முனி மற்றும் காஞ்சனா படங்களில் காட்டப்படுவது போல் இதிலும் பேய்களுக்குப் பயப்படுபவராக லாரன்சைக் காட்டுகிறார்கள்.
கதை இப்படி வித்தியாசமாகத் தொடங்கினாலும், வலுவான திரைக்கதையை எப்படி அமைப்பது என்பது தெரியாமல், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் எல்லாம் இருளையும், பேய் முகங்களையும், இரவு நேரங்களில் வீட்டில் பேய்கள் நடமாடுவது போலவும் காட்டியே, கதை ஏதும் இல்லாமல் படத்தை நகர்த்துகின்றார்கள்.
கடற்கரை மணலில் புதைந்து கிடக்கும் தாலிக் கொடி ஒன்று தாப்சியின் கைக்குள் சிக்க, பின்னர் அதனைச் சுற்றி கதை நகர்கின்றது. வழக்கமான பேய் ஓட்டுபவர்கள், இரவு நேர மங்கிய வெளிச்சத்தில் அங்குமிங்கும் பாயும் கருமையான உருவங்கள் என காஞ்சனாவில் பார்த்த அதே இலக்கணம், இதிலும் தொடர்கின்றது.
ஆனால், இந்த முறையும் கோவை சரளா இருந்தாலும், காஞ்சனாவில் இருந்த லூட்டியையும், கலகலப்பையும் காணமுடியவில்லை.
வெறும் பயமுறுத்தல் காட்சிகளை மட்டும் வைத்தே முக்கால் வாசிப் படத்தை முடித்து விட்டு, இறுதிக் கால்வாசியில் மட்டும் மணலுக்குள் புதைந்து கிடந்த தாலியின் பின்னணிக் கதையைக் கூறுகின்றார்கள்.
அதிலும் ஒன்றும் புதுமையில்லை. பல படங்களில் பார்த்த – கடன்வாங்கிக் கொண்டு திரும்ப செலுத்த முடியாத அவதிப்படலம் – மொட்டைத் தலை வில்லன்கள் குடும்பத்தோடு கொலை செய்வது – காதல் கைகூடாதது என அதே அரைத்தமாவு.
ஒரே வித்தியாசமான ஆறுதல், கால் ஊனமாக வரும் நித்யா மேனனின் முகமும், நடிப்பும்தான்.
இறுதியில் ஒரு கொலை சம்பவத்தில் இறந்தவர்கள்தான் ஆவிகளாக அல்லது பேய்களாக வந்து பழிவாங்குகின்றார்கள், என்ற ஜமீந்தார் காலத்து தத்துவத்தை மீண்டும் ஒருமுறை நிலை நிறுத்தி படம் முடிகின்றது.
படத்தின் பலம்
படத்தில் பார்க்கக் கூடிய ஒரே அழகான அம்சம் தாப்சிதான். பேய்கள் என்ற பெயரில் விகாரமான உருவங்களையும், அகோரமான முகங்களையும் திரும்பத் திரும்பக் காட்டி பயமுறுத்தும் காட்சிகளுக்கு நடுவில் , ‘வெள்ளாவியில் வைத்து வெளுத்தவராக’ அழகாலும் இயல்பான நடிப்பாலும் கவர்கிறார் தாப்சி.
தொலைக்காட்சி இயக்குநராக காட்டப்படுவதால், அவரது கொஞ்சும் தமிழ்கூட பாந்தமாகப் பொருந்திப் போகின்றது.
ஒரு பாடல் காட்சியில், மெல்லிய சேலையில் லாரன்சுடன் நெருக்கமும் காட்டி நடித்திருக்கின்றார் தாப்சி.
படத்தின் மற்றொரு பலம் நித்யா மேனன். காஞ்சனா -2 படத்தோடு இன்று வெளியாகும் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் கதாநாயகியும் இவர்தான்.
இதில், கால் ஊனமான பெண்ணாக வந்து, திருமணம் கைகூடாமல் தான் படும் அவதியை நன்கு பிரதிபலித்திருக்கின்றார் நித்யா மேனன்.
அகால மரணமடைந்த படத் தொகுப்பாளர் கிஷோரின் திறமையான படத் தொகுப்பும் படத்தை ஓரளவுக்குக் காப்பாற்றியுள்ளது. அதற்கு மறக்காமல், அவருக்கு படத்தின் தொடக்கத்திலேயே அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.
படத்தின் பலவீனங்கள்
காஞ்சனாவில் நிறைய யோசித்து திருநங்கைகளின் பிரச்சனைகளை முன் நிறுத்திய லாரன்ஸ் இதில் அந்த அளவுக்கு சிந்தனையைச் செலுத்தாமல், வெறும் பயமுறுத்தல் காட்சிகளிலேயே படத்தை நகர்த்தியிருப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.
இறுதிக் காட்சியில் அத்தனை விகாரமான, அகோரமான முகங்கள் ஒன்றாய் கூடி ஆடுவது தேவைதானா? அருவருப்பாக இருக்கிறது.
லாரன்சுக்கு முன்பு பார்த்த அதே முகபாவங்கள். அதனால் கவரவில்லை. முதலில் பயப்படுவது, பின்னர் ஆவி வந்து புகுந்தவராக கண்களை உருட்டுவது – மீண்டும் மீண்டும் அதையே செய்கின்றார்.
இறுதிக் காட்சிகளில், லாரன்ஸ் குழந்தை போன்றும், கிழவி போன்றும் வருவது ஏன் என்றும் தெரியவில்லை. கதையோடு ஒட்டவில்லை என்பதால் அந்தக் காட்சிகளை இரசிக்க முடியவில்லை.
அதிலும், இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்ல அங்கே காவலாளி போடுவதும், அவருக்கும் மயில்சாமிக்கும் இடையில் நடக்கும் இரட்டை அர்த்த உரையாடலும் விரசத்தின் உச்சம். சகிக்க முடியவில்லை.
எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்களும் எடுபடவில்லை. பின்னணி இசையும் ஏனோ ஒரே இரைச்சல், காட்டுக் கூச்சல். எல்லோருமே, எப்போதுமே பேயைப் பார்த்து அலறிக் கொண்டே இருக்கின்றார்கள். இறுதிப் பாடலிலும் அளவுக்கு மீறிய சத்தம்.
படத்தின் நீளமும் அதிகம். இரண்டே முக்கால் மணி நேரம். அதிலும் அந்த இறுதி சண்டைக் காட்சி நீண்டு கொண்டே போக, நமக்கு பேய்களின் சண்டையைப் பார்த்து விட்டு பயத்தை விட, கொட்டாவிதான் அதிகம் வருகின்றது.
அதிலும், இந்த நவீன விஞ்ஞான காலத்தில் பேய் ஓட்டுகிறவர்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு சடலத்தில் இருந்து இன்னொரு சடலத்துக்குள் கூடுவிட்டு கூடு பாய்வது போல் காட்டியிருப்பது காதில் முழம் முழமாய்ப் பூச்சுற்றல்!
எல்லாம் முடிந்து மிரண்டுபோய், அப்பாடா, என்று வெளியே வந்தால், இறுதியில் இன்னொரு பயமுறுத்தலைக் காட்டுகிறார் லாரன்ஸ். முனி – 4 பெயரில் அடுத்த படத்தோடு வருகிறாராம்.
வந்தால், இதே காஞ்சனா -2 போல் வராதீர்கள்!
வித்தியாச சிந்தனையோடும், கொஞ்சம் கதையோடும் வாருங்கள்!
-இரா.முத்தரசன்
,