Home கலை உலகம் திரைவிமர்சனம்: இன்று நேற்று நாளை – காலச்சக்கரத்தில் ஒரு சுவாரசியப் பயணம்!

திரைவிமர்சனம்: இன்று நேற்று நாளை – காலச்சக்கரத்தில் ஒரு சுவாரசியப் பயணம்!

625
0
SHARE
Ad

inru-netru-naalai1கோலாலம்பூர், ஜூன் 27 – ‘டோட்டல் ரீக்கால்’, ‘பேக் டு தி ஃபியூச்சர்’ போன்ற படங்களை டப்பிங் செய்து தான் பார்க்க முடியுமா, நேரடித் தமிழ்ப் படங்கள் எதுவும் வந்துவிடாதா என்ற தமிழ் ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்தை ஓரளவு திருப்தி செய்திருக்கும் படம் தான் ‘இன்று நேற்று நாளை’. ஷங்கரால் தான் முடியும், மணிரத்தினம் எப்படியும் எடுத்துவிடுவார் என பலரும் கூறி வந்த, சற்றே சிக்கலான டைம் டிராவல் கதையம்சம் கொண்ட படத்தை, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப திரைக்கதையில் எந்தவொரு குழப்பமும் இல்லாமல் இயக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் ரவிகுமாருக்கும், இந்தப் படத்தைத் தயாரித்த சி.வி.குமாருக்கும் முதலில் பாராட்டுக்கள்.

கதை சுருக்கம் இது தான்

indruஎதிர்காலத்தில் (2065) விஞ்ஞானி ஆர்யா (ஏற்றுக் கொள்வதற்குச் சிரமமாகத் தான் உள்ளது), தான் உருவாக்கிய டைம் மெஷினை, தனது மூத்த விஞ்ஞானியின் கட்டளைப்படி ஒரு நாய்க் குட்டியை வைத்துச் சோதனை செய்கிறார். நிகழ்காலத்திற்கு (2015) வரும் டைம் மெஷின், நண்பர்களான விஷ்ணு விஷால் மற்றும் கருணாகரனிடம் கிடைக்கிறது. காலத்தை மாற்ற நினைக்கும் நண்பர்கள் என்னென்ன சிக்கலைச் சந்திக்கிறார்கள், டைம் மெஷின் என்ன ஆனது என்பதை நகைச்சுவையுடன் விறுவிறுப்பாகச் சொல்லி இருக்கும் படம் தான் ‘இன்று நேற்று நாளை’

#TamilSchoolmychoice

திரைக்கதை

பொதுவாக சயின்ஸ் ஃபிக்சன் கதைகள் என்றாலே ஒன்று பார்வையாளர்களைச் சீட்டின் நுனிக்கு உட்கார வைத்துவிடும் அல்லது ஏன்டா  படத்திற்கு வந்தோம் என்ற நினைப்பை ஏற்படுத்தி விடும். நல்ல வேளையாக தமிழின் முதல் முயற்சி, பார்வையாளர்களுக்குச் சோர்வை ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் நன்கு திட்டமிடப்பட்ட திரைக்கதை தான்.

வித்தியாசமான கதைக்களம், குறைந்த பட்ஜெட், முதல் படம் என இயக்குனருக்குப் பல நெருக்கடிகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் தாண்டி, தமிழ்ச் சினிமாவின் வழக்கமான காதல் கதையில், டைம் டிராவலைக் கச்சிதமாகப் பொருந்தச் செய்திருக்கிறார். குறிப்பாக, நண்பர்கள் டைம் மெஷினில் கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மாறி மாறிப் பயணிக்கும் இடங்களிலும், டைம் மெஷினை வைத்துப் பணம் சம்பாதிக்கும் இடங்களிலும் இயக்குனர் நச்சென முத்திரை பதிக்கிறார்.

நடிப்பு

indru-netru-naalai-movie-poster‘முண்டாசு பட்டி’ திரைப்படத்தின் வெற்றிக்ப் பிறகு விஷ்ணு மீது தமிழ்ச் சினிமாவில் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்பதை ரசிகர்களின் டுவிட்டர் செய்திகளாலும், பேஸ்புக் பதிவுகளாலும் அறிந்து கொள்ள முடிகிறது. அவரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு தனது சிறந்த நடிப்பைக் கொடுத்து நடித்திருக்கிறாரா என்றால் இல்லை என்றே கூறத் தோன்றுகிறது. காரணம் அவருக்கான இடத்தைக் கருணாகரனும், கதையும் ஆக்கிரமித்து விட்டன.

காதலியின் பிரிவால் அவளை நினைத்து உடைந்து அழும் இடங்களிலும், அவளுக்காக வில்லனுடன் ஆக்ரோஷமாகச் சண்டை போடும் இடங்களிலும் மட்டுமே விஷ்ணுவால் கைதட்டல் வாங்க முடிகிறது. அதைத் தாண்டி அவரால் இந்தப் படத்தில் வேறெதுவும் செய்ய முடியவில்லை. குறிப்பாகக் கருணாவின் ‘டைமிங்’ காமெடிக்கு விஷ்ணுவால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

ஆனால் கருணாகரன் இந்தப் படத்தில் தனி முத்திரை பதித்து விட்டார். வில்லன் கொன்று விடுவானோ என்று அவர் பயந்து நடுங்கும் இடங்களிலும், புலிவெட்டிச் சித்தராக அருள்வாக்கு சொல்லும் இடங்களிலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கூடிய விரைவில் இவர் விஜய், அஜித் படங்களில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு முட்டைக் கண்ணை வைத்துக் கொண்டு மனிதர் முகபாவனைகளில் வெளுத்து வாங்குகிறார்.

விஷ்ணு மற்றும் கருணாவிற்கு அடுத்தபடியாகப் படத்தில் வில்லன் நடிகர் ரவி ஷங்கரும், விஞ்ஞானி கிரிதர பார்த்தசாரதியாக வரும் டி.எம். கார்த்திக்கும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர். வில்லன் நடிகர் ரவி ஷங்கரை எங்கேயோ பார்த்துள்ளது போல் உங்களுக்குத் தோன்றலாம். விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நீண்ட முடி வைத்துக் கொண்டு ‘வாடா’ என்று கத்துவாரே அவரே தான். டி.எம். கார்த்திக்கும் விஜய்யின் ‘நண்பன்’, ஹாலிவுட் படமான ‘லைஃப் ஆப் பை’ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருந்தாலும், இதில் மரை கழன்ற விஞ்ஞானியாக ‘ஆல்ஃபா  காலிங்க்..ஆல்ஃபா’ என்று கூறியே ரசிக்க வைக்கிறார்.

மற்றபடி படத்தில் நாயகி மியா ஜார்ஜ், நாயகியின் தாய் தந்தையாக ஜெய பிரகாஷ் (வழக்கம் போல), அனுபமா குமார் போன்றவர்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றனர். படத்தில் பாராட்டப்பட வேண்டிய  தொழில்நுட்பக் கலைஞர்களில் முக்கியமானவர்கள் படத் தொகுப்பாளர் லியோ ஜான் பால், கலை இயக்குனர் விஜய் ஆதிநாதன், ஒளிப்பதிவாளர் ஏ.வசந்த் மற்றும் இசை அமைப்பாளர் ‘ஹிப்-ஹாப் தமிழா’ ஆதி ஆகியோர் தான். அதிலும் டைம் டிராவல் நடைபெறும் இடங்களில் நால்வர் கூட்டணி இணைந்து செயல்பட்டுள்ளது காட்சிகளில் தெரிகிறது.

பாராட்டைப் பெறும் இடங்கள்

ஒரு காட்சியில் டைம் மெஷினை விஞ்ஞானி கிரிதர பார்த்தசாரதியிடம் கொடுத்து விட்டு அதனை  வாங்குவதற்காக அவர் வீட்டிற்கு விஷ்ணுவும், கருணாவும் செல்கின்றனர். அங்கு எதிர்த்த வீட்டுப் பெண்ணிடம், கருணா நடத்தும் உரையாடல்கள் வயிற்றைப் பதம் பார்த்து விடும் அளவிற்குச் சிரிப்பை வரவழைக்கின்றன.

அதேபோல் டைம் மெஷின் பயணத்தின் போது வி.எஸ்.ராகவனுக்கு உதவப் போய், வில்லன் காவல் துறையிடமிருந்து தப்பிப்பது, வில்லனை கதாநாயன் அழிப்பார் என்று எதிர்பார்த்த தருணத்தில், வில்லனுக்கு நிகழும் வித்தியாசமான முடிவு போன்ற இடங்கள் ரசிக்க வைக்கின்றன. வி.எஸ்.ராகவனுக்கு இதுதான் கடைசிப் படம் போன்று தெரிகிறது. அவரால் தனது கதாபாத்திரத்திற்குக் குரல் கூட கொடுக்க முடியாமல் போனது துரதிஷ்டமே.

இயக்குனருக்குச் சிறு சிறு குட்டுகள்

டைம் மெஷின் வைத்து விஷ்ணுவும், கருணாவும் காணாமல் போனதைக் கண்டுபிடித்துத் தரும் காட்சியில் குடிகாரர் ஒருவர், காணாமல் போன மாஸ் விமானத்தைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்பதை நகைச்சுவையாக்கி இருப்பது ஏனோ மனதிற்குள் வலியையும், நெருடலையும் ஏற்படுத்தி விடுகிறது.

மேலும், குறிப்பிட்ட சில நொடிகளில் மீண்டு வரவில்லை என்றால் தானாக வெடிக்கும் படி ஆர்யாவால் நிரல் செய்யப்பட்ட டைம் மெஷின், காலதாமதமாகியும் ஏன் வெடிக்கவில்லை என்பதை இயக்குனர் தான் கூற வேண்டும்.

அதேபோல், படத்தின் விளம்பரங்களில் காந்தியையும், 1940 காலகட்டத்தைக் காட்டி விட்டு, நகைச்சுவைக் காட்சிக்காக  மட்டும் அதனைப் பயன்படுத்தி இருப்பது வீணான திணிப்பு என்றே தோன்றுகிறது.

மற்றபடி, எந்தவொரு முகச்சுழிப்புக் காட்சிகளும் இல்லாததால், குடும்பத்துடன் காலச் சக்கரத்தில் தாராளமாக நேற்று மட்டுமல்ல, இன்றும் நாளையும் பயணிக்கலாம்.

– சி.ஷா