Home நாடு அம்னோ தேர்தல்கள் 2018வரை ஒத்திவைப்பு – மொய்தீன் ஆதிக்கத்தைத் தடுக்கும் வியூகமா?

அம்னோ தேர்தல்கள் 2018வரை ஒத்திவைப்பு – மொய்தீன் ஆதிக்கத்தைத் தடுக்கும் வியூகமா?

504
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 27 – 1எம்டிபி சர்ச்சைகளால் பிரதமர் நஜிப்பின் பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வரும் வேளையில், யாரும் எதிர்பாராத விதமாக, அடுத்த வருடம் நடைபெற வேண்டிய அம்னோ கட்சித் தேர்தல்கள் 2018வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக நஜிப் அறிவித்துள்ளார்.

najibஇந்த முடிவு, துணைப் பிரதமரும், அம்னோ துணைத் தலைவருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசினின் அரசியல் ஆதிக்கத்தையும், வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும், ஒரு வியூகமாகப் பார்க்கப்படுகின்றது.

2018ஆம் ஆண்டிற்குள் அடுத்த 14வது பொதுத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும் என்பதால், அதற்காகக் கட்சியைத் தயார்ப்படுத்தும் ஒரு வியூகமாக இந்த ஒத்திவைப்பு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அடுத்த ஆண்டு நடைபெறும் அம்னோ தேர்தலில் நஜிப் பதவி விலக வேண்டுமென்ற நெருக்குதல்கள் தீவிரமடையலாம், அதே வேளையில் மொய்தீன் தலைவருக்குப் போட்டியிடத் தயாராகலாம் என்ற அச்சம் காரணமாகவும், இந்த முடிவு நஜிப் தரப்பால் முன்மொழியப்பட்டு அம்னோ உச்சமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

கடைசியாக அம்னோ தேர்தல்கள் 2013ஆம் ஆண்டில் நடைபெற்றன.

Tan-Sri-Muhyiddin-Yassinநேற்று அம்னோ உச்சமன்றத்தின் தேர்தல் ஒத்திவைப்பு முடிவை அறிவித்த நஜிப், மக்களுக்கு சேவை செய்வது, ஒற்றுமையை வலுப்படுத்துவது, 14வது பொதுத் தேர்தலுக்குத் தயாராவது, ஆகிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார்.

இதுபோன்ற முடிவுகள் அம்னோவுக்குப் புதிதல்ல என்றும், ஏற்கனவே மகாதீர், அப்துல்லா படாவி தலைமைத்துவ ஆட்சிகளின் போது இதுபோன்ற ஒத்திவைப்பு முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.

உட்கட்சிப் போராட்டங்களைத் தவிர்ப்பதற்கும், ஒருசிலரின் சொந்த அரசியல் வியூக நோக்கங்களால் உட்கட்சி நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் இந்த ஒத்திவைப்பு முடிவு தேவைப்படுவதாகவும் நஜிப் அறிவித்துள்ளார்.

அம்னோவின் இந்த முடிவால், நஜிப் பதவி விலக வேண்டுமென மகாதீர் தொடர்ந்து நடத்தி வரும் அரசியல் தாக்குதல்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்னோ தேர்தல் ஒத்திவைப்பு குறித்து மகாதீர் இனி என்ன கருத்து சொல்வார் என்ற ஆர்வமும் அரசியல் பார்வையாளர்களிடையே தற்போது ஏற்பட்டுள்ளது.

-இரா.முத்தரசன்