கொல்கத்தா, ஜூலை 2- கொல்கத்தா பழங்கால நகரம்; மக்கள் தொகை நிறைந்த நகரம்; அதேபோல் போக்குவரத்து நெரிசலும் அதிகமுள்ள நகரம். இங்குள்ள போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கக் ‘கயிற்று வழி மகிழுந்து’ப் (rope way car) போக்குவரத்து விரைவில் அறிமுகமாக உள்ளது.
‘கர்வோ’ என்ற நிறுவனம், கொல்கத்தா நகரச் சாலைகளில் ‘கயிற்று வழி மகிழுந்து’ப் போக்குவரத்தை அமைக்க முன்வந்து, அதற்கான அனுமதி கோரி, மாநில அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
அனுமதி கிடைத்த உடன், இரண்டு ஆண்டுகளில், கொல்கத்தா நகரச் சாலைகளில் கயிற்று வழி மகிழுந்துகளைக் காண முடியும்.
இதன் சிறப்பம்சங்கள்:
25 வினாடிகளுக்கு ஒரு பெட்டி வீதம் கயிற்று மகிழுந்து புறப்படும். ஒரு பெட்டிக்கு 10 பேர் வீதம் ஒரு மணி நேரத்தில் 2,500 பேர் வரை பயணிக்க முடியும்.
மணிக்கு 12.5 கி.மீ வேகத்தில் தான் இது செல்லும் என்பதால், மிகவும் பாதுகாப்பானது.
மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்துக்கு ஆகும் செலவில், 10ல் ஒரு பங்கு தான் கயிற்று மகிழுந்துப் போக்குவரத்துக்குச் செலவாகும் என்பதால் இது சிக்கனமானது.
மின்சாரத்தில் இயங்குவதால், சுற்றுச் சூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படாது.
இந்தக் கயிற்று வழி மகிழுந்து, படிப்படியாகச் சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கும் வரும்.