Home இந்தியா இந்தியப் பொருளாதாரம் சூடு பிடிக்கிறது:ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்!

இந்தியப் பொருளாதாரம் சூடு பிடிக்கிறது:ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்!

515
0
SHARE
Ad

Raghuram-Rajan1சென்னை, ஜூலை3- அண்மைக் காலமாகக் கிரீஸ் நாட்டுப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அது போல் இந்தியாவும் வீழ்ச்சியைச் சந்த்தித்து வருகிறதா? என்ற ஐயத்திற்கு, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ஜி.ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுக் கூட்டத்தில் பங்கேற்க, சென்னை வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியப் பொருளாதாரம், மந்தநிலையில் இருந்து, உறுதியாக மறுமலர்ச்சிப் பாதைக்குத்  திரும்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு அறிகுறியாக, மூலதன முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சீர்திருத்தம் தேவை. தற்போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

பொருளாதாரம் வளர்ச்சி கண்டால், தடைபட்ட திட்டங்கள், செயல்படத் துவங்குவதில் சிரமம் இருக்காது. இதனால், ஏற்கனவே முடங்கிப்போன நிலையில் இருக்கும் அரசுத் திட்டங்களை சீர்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அனைத்து ஆசிய நாடுகளிலும் ஏற்றுமதி சரிவடைந்த நிலையில் உள்ளது. இந்தியாவிலும் அதன் பிரதிபலிப்பு காணப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றமே இதற்கு முக்கியக் காரணம்.

தற்போது, அரசுக் கடன் பத்திரங்களில், அந்நிய நிதி நிறுவனங்கள், டாலரில் முதலீடு செய்து வருகின்றன. அதற்குப் பதிலாக, ரூபாயில் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தியர்கள் அனைவரையுமே நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதற்கான நிதி ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படும். இதில் பொருளாதார நிபுணர்கள், வல்லுநர்கள், மத்திய–மாநில அரசுப் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.

ஏற்கனவே இந்தியர்களின் வங்கி கணக்குகள் உட்பட பல்வேறு தகவல்கள் பெறப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரையும் அடுத்த ஐந்தாண்டுக்குள் நிதிக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கான வரைவுத் திட்டத்தை இந்தக்குழு தயார் செய்யும்.

ரூபாய் நோட்டுகள் இல்லாத பணப்பரிமாற்றத்தை மத்திய நிதித்துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார். நாங்களும் மின்னணுப் பணப்பரிமாற்றம், இணைய வழிப் பணப் பறிமாற்றம் போன்றவற்றை  மக்களிடையே இன்னும் அதிகமாகக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விலைவாசி ஏற்றம், பணவீக்கம் போன்றவை கவலை அளிப்பவைதான். ஆனாலும்,பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உணவுப் பொருட்களின் விலை கட்டுக்குள் உள்ளன.

பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. யூரோ பணத்துடன் ஒப்பிடும்போது இந்தியப் பண மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

கிரீஸ் நாட்டில் பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பாதிப்பு, இந்தியாவை நேரடியாகப் பாதிக்காது. அந்நியச் செலவாணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மேற்கண்ட தகவல்களை அவர் தெரிவித்தார்.