Home இந்தியா மர்மமான முறையில் கடலில் மிதந்த  புதிய சொகுசு  மகிழுந்து: காவல்துறையினர் விசாரணை!

மர்மமான முறையில் கடலில் மிதந்த  புதிய சொகுசு  மகிழுந்து: காவல்துறையினர் விசாரணை!

526
0
SHARE
Ad

car_2460618fசென்னை, ஜூலை 3- கோவளம் அருகே கடலில்  மர்மமான முறையில் மிதந்து கொண்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள புதிய ‘ஆவ்டி’ சொகுசு மகிழுந்தைக் காவல்துறையினர் மீட்டு, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையை அடுத்த கோவளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், வழக்கம்போல் நேற்று அதிகாலை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அப்போது, அங்குள்ள பாறைகளை ஒட்டி, கடலில் வெள்ளை நிற மகிழுந்து( car) அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி மிதந்து கொண்டிருந்ததைக் கண்டு வியந்தனர்.

உடனடியாக அவர்கள், மீன் பிடிக்கப் பயன்படுத்தும் கயிறுகளைப் பயன்படுத்தி  மகிழுந்தைக் கரைக்கு இழுத்துவர முயற்சித்தனர்.

#TamilSchoolmychoice

மகிழுந்தின் முன் பகுதி மணலுக்குள் சிக்கிக்  கொண்டதாலும், அலை பலமாக அடித்ததாலும் இழுக்க முடியவில்லை.

உடனே இதுபற்றிக் கேளம்பாக்கம் காவல்துறையினருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.

கேளம்பாக்கம் காவல்துறையினர் கோவளம் கடற்கரைக்கு விரைந்து வந்து  பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மகிழுந்தை மீட்டுக் கரைக்குக் கொண்டுவந்தனர்.

ஆவ்டி நிறுவனத்தின் ‘க்யூ 3’ மாடலைச் சேர்ந்த இந்த மகிழுந்து சமீபத்தில் வாங்கப்பட்டுள்ளது; பதிவு எண் இல்லை; ‘பதிவிற்காக’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்புறக் கண்ணாடியில் ‘வழக்கறிஞர்’ என்பதற்கான அடையாளச் சின்னம் இருந்தது.

மேலும், அந்த மகிழுந்துக்குள் ஒரு  கைபேசி மற்றும் ஒரு  சிறிய பணப்பை(money purse)ஆகியவை இருந்தன.

மகிழுந்தின்  முன்புறப் பகுதி உடைந்து கீழே கிடந்ததாலும், மகிழுந்து மணலில் ஓடி, பாறைக் குன்றை நெருங்கிய அடையாளம் உள்ளதாலும், பாறையில் மோதி கடலுக்குள் புகுந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

இதுகுறித்துக் கேளம்பாக்கம் காவல்துறை மேற்பார்வையாளர் (போலீஸ் இன்ஸ்பெக்டர்) ராஜேந்திரபாபு தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சென்னை கவுரிவாக்கத்தைச் சேர்ந்த ‘யுவா பவுண்டேசன்’ உரிமையாளர் வில்லியம் என்பவர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது மகிழுந்தைக் காணவில்லை என்று புகார் செய்தார்.

இதுகுறித்து அவர் காவல்துறையினரிடம் தெரிவித்ததாவது:

“நான் கல்குவாரி நடத்தி வருகிறேன். என்னிடம் எனது அத்தை மகன் ஜோஸ்வா (வயது 27) என்பவன் ஓட்டுநராக இருக்கிறான்.

சம்பவத்தன்று எனது புதிய மகிழுந்தைக் கொடுத்து தொழில் சம்பந்தமாக ஒருவரைப் பார்ப்பதற்காக அனுப்பி வைத்தேன்.

அவன் சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரத்திற்குச்  செல்லும் போது, முட்டுக்காடு அருகே சாவியோடு மகிழுந்தைச் சாலை ஓரமாக நிறுத்திவிட்டுச் சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறான்.

அப்போது மர்ம நபர்கள் மகிழுந்தைக் கடத்திச் சென்று விட்டனர். பின்னர் இதுபற்றி ஜோஸ்வா எனக்குத் தகவல் தெரிவித்தான். இதற்கிடையில் மகிழுந்து ஒன்று கோவளம் கடலில் மிதப்பதாகத் தகவல் கிடைத்ததும் உடனடியாக வந்து காவல்துறையில் புகார் செய்துள்ளேன்” என்றார்.

மகிழுந்தைக் கடத்திச் சென்றவர்கள் யார்?அது எப்படி விபத்துக்குள்ளாகிக் கடலுக்குள் போனது?வில்லியம்ஸ் ஏன் உடனே வந்து புகார் செய்யவில்லை?என்றெல்லாம் காவல்துறையினர் தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

.