Home நாடு “2012ஆம் ஆண்டு மஇகா கிளைகள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – சக்திவேல் விளக்கம்

“2012ஆம் ஆண்டு மஇகா கிளைகள் அனைத்தும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் – சக்திவேல் விளக்கம்

588
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 3 – மஇகா தலைமையகத்தால் நடத்தப்படவிருக்கும் மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்து இன்று ஒரு சிலர் விடுத்த குழப்பமான அறிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வண்ணம் மஇகா தலைமைச் செயலாளர் அ.சக்திவேல் இன்று விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் சில விளக்கங்களை அளித்துள்ளார்.

அவரது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

Sakthivel-Sliderஎதிர்வரும் ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் மஇகா தலைமையகத்தால் அதிகாரப்பூர்வமாக நடத்தப்படவிருக்கும் மஇகா கிளைகளுக்கான வேட்புமனு தாக்கல் குறித்து எழுந்துள்ள குழப்பங்களைத் தெளிவுபடுத்த நான் சில விளக்கங்களை வழங்க விரும்புகின்றேன்”

#TamilSchoolmychoice

“சங்கப் பதிவகத்தால் இடைக்காலத் தேசியத் தலைவராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களின் ஒப்புதலோடும், சங்கப் பதிவகம் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படும் 2009 மத்தியச் செயலவையின் உத்தரவுகளுக்கு ஏற்பவும், இந்த வேட்புமனுத் தாக்கல்கள் நடத்தப்படுகின்றன.”

சங்கப் பதிவகத்தால் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 2012ஆம் ஆண்டிற்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கிளைகளும் இந்த வேட்புமனுத் தாக்கலில் பங்குபெற முடியும்.

5 பேர் மட்டும் பங்கு பெற முடியாது

“நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த காரணத்தால், மஇகா அமைப்பு விதி 91இன் படி தங்களின் உறுப்பியத்தை இயல்பாகவே, சட்டப்படி இழந்துள்ள டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், கே.இராமலிங்கம், பிரகாஷ் ராவ், ஆகிய ஐவர் மட்டும் இந்த வேட்புமனு தாக்கலில் பங்கு பெற முடியாது.”

“ஆனாலும், அவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்ற கிளைகளும், அந்தக் கிளைகளின் உறுப்பினர்களும் நடைபெறவிருக்கும் வேட்புமனு  தாக்கலில் பங்கு பெற முடியும். ஆகவே, சட்டப்படியும், கட்சியின் அமைப்பு விதிகளின்படியும் உறுப்பியத்தை இழந்தவர்களைத் தவிர்த்து, மஇகா சட்டவிதிகளின்படி தகுதி பெறும் மற்ற அனைவரும் இந்த வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறலாம்”

இரண்டு தரப்பு என்று எதுவும் இல்லை – இருப்பது ஒரே தரப்புதான்

MIC-Logo-Sliderசங்கப் பதிவகத்தைப் பொறுத்தவரை இரண்டு தரப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் அங்கீகரித்துள்ள 2009 மத்தியச் செயலவை, இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் தலைமையின் கீழ் இந்தத் தேர்தல்களை நடத்துகின்றது. சங்கப் பதிவகம் அங்கீகரித்த 2012 வரையிலான கிளைகளின் பட்டியலைப் பின்பற்றித்தான் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

எனவே, அனைவரும் வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறலாம், யாருக்கும் தடை விதிக்கப்படாது எனத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேற்கொண்டு விளக்கம் பெற விரும்பும் கிளைத் தலைவர்கள் மஇகா தலைமையகத்தைத் தாராளமாக அணுகித் தேவையான விளக்கங்களைப் பெறலாம் என்பதுடன் தங்களின் கிளைகளின் பதிவுகளையும் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்.

வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாத கிளைகளின் பதிவு ரத்தாகும்

எதிர்வரும் ஜூலை 10,11,12ஆம் தேதிகளில் வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாத கிளைகள் இயல்பாகவே சங்கப் பதிவகத்தில் தங்களின் பதிவுகளை இழந்து விடும் என்பதையும் மஇகா கிளைகளுக்கு இந்த அறிக்கையின் வழி நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இன்று பத்திரிக்கையில் வெளிவந்திருக்கும் சுந்தர் சுப்ரமணியத்தின் அறிக்கை தொடர்பில் அதில் வந்துள்ள சில தவறான வியாக்கியானங்களை மேற்கண்ட எனது விளக்கம் தெளிவுபடுத்தும் எனவும் நம்புகின்றேன்.

-இவ்வாறு மஇகா தலைமைச் செயலாளர் சக்திவேல் தனது பத்திரிக்கை அறிக்கையின் வழி விளக்கங்கள் கொடுத்துள்ளார்.