புதுடில்லி, ஜூலை 4- சிறப்பாகக் குப்பை பொறுக்குபவர்களுக்குத் தேசிய விருது வழங்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த கழிவு மேலாண்மை குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
“நமது நாட்டில் குப்பை பொறுக்கும் தொழிலாளிகள் லட்சக் கணக்கில் உள்ளனர். அவர்களால் தான் நம் நாடு ஓரளவு சுத்தமாகிறது.எனவே, அவர்களுடைய முயற்சிகளை ஊக்குவிக்கவும் அங்கீகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
அதற்காக அவர்களுக்குத் தேசிய விருது வழங்கிக் கெளரவிக்கவும் தயாராக இருக்கிறது.
நாட்டில் சிறந்த முறையில் குப்பை பொறுக்கும் மூன்று பேர் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்குத் தலா 1.5 லட்சம் ரொக்கப் பரிசுடன் தேசிய விருதும் அளிக்கப்படும்” என்றார்.
குப்பை பொறுக்கும் புண்ணியவான்களுக்கெல்லாம் இது ஓர் இனிப்பான செய்தி. குப்பைக்குள்ளும் முத்திருக்கிறது என்பது இவர்கள் விசயத்தில் மெத்தச் சரியே!
இனிமேல் ” நீ குப்பை பொறுக்கத்தான் லாயக்கு” என்று யாரையும் திட்ட முடியாது. ஏனென்றால், சிறப்பாகக் குப்பை பொறுக்கிக் கூட தேசிய விருது வாங்கலாமே!