கொழும்பு,ஜூலை 4- இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே போட்டியிட அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவைத் தோற்கடித்துச் சிறிசேனா அதிபர் ஆனார். அதோடு மட்டுமில்லாமல், ராஜபக்சே சார்ந்த ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பையும் கைப்பற்றினார் சிறிசேனா.
இதனால் மிகவும் மனமொடிந்து போய், வீட்டுக்குள் முடங்கியே கிடந்தார் ராஜபக்சே.
அண்மையில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அடுத்த மாதம் 17-ஆம் தேதி, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார் சிறிசேனா.
இந்நிலையில், ருசி கண்ட பூனை போல், ராஜபக்சேவுக்கு மீண்டும் பதவி ஆசை ஏற்பட்டது. அதிபர் பதவி இல்லை என்றால் என்ன, பிரதமர் பதவிதான் இருக்கிறதே என்று, பிரதமராகப் போட்டியிட ஆசை கொண்டார்.
ஆனால், இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் ராஜபக்சே போட்டியிட அனுமதிக்க முடியாதென்று சிறிசேனா மறுத்துவிட்டார்.
தன் கனவு கலைந்து போனதால், அடுத்தகட்டமாக, ஆளும் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம், சிறிசேனாவின் அனுமதியைப் பெறத் தூது விட்டார் ராஜபக்சே.
ராஜபக்சே மீண்டும் தலையெடுப்பதைச் சிறிசேனா கொஞ்சமும் விரும்பவில்லை.
ஆனால், ராஜபக்சே தளராமல் போராடி, ஆதரவாளர்கள் மூலம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, ஒருவழியாகச் சிறிசேனாவைச் சம்மதிக்க வைத்துவிட்டார்.
ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜெயந்தா, பிரதமராக ராஜபக்சே போட்டியிடுவதை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.
ராஜபக்சே தேர்தலில் போட்டியிட, அதிபர் சிறிசேனா சம்மதம் தெரிவித்திருப்பது, இலங்கை அரசியல் வட்டாரங்களில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.