Home உலகம் விடுதலைப்புலிகள் புதிய கட்சி தொடங்கினர்! பாராளுமன்றத் தேர்தலில் போட்டி!

விடுதலைப்புலிகள் புதிய கட்சி தொடங்கினர்! பாராளுமன்றத் தேர்தலில் போட்டி!

536
0
SHARE
Ad

LTTE-Logoகொழும்பு,ஜுலை 4- இலங்கையில் விடுதலைப்புலிகள், ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளனர். இந்தக் கட்சியின் மூலம் அவர்கள், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் 1976 தொடங்கி 2009–ம் ஆண்டுவரை ஆயுதம் ஏந்தி நடத்திய போராட்டங்கள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின.

2009-ஆம் ஆண்டு நடந்த போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடந்த பின்பு, விடுதலைப்புலிகள் இயக்கம் சிதைந்து போனது; அதன் செயல்பாடுகள் தீவிரமிழந்து நீர்த்துப் போயின.

#TamilSchoolmychoice

இந்நிலையில், திடீரென்று அவர்கள் கட்சி தொடங்கி, அரசியல் களத்தில் இறங்கப் போவதாகப் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலை முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் ஓர் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தின் முடிவில், ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி, அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–

விடுதலைப் புலிகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து, ஒரு புதிய கட்டுறுதியான அமைப்பை ஏற்படுத்துவது.

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலன்களை மீட்டெடுப்பதற்காக, வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்குத் தேர்தல் மாவட்டங்கள் தோறும் வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப்புலிகளில் தலா 2 பேரையாவது சேர்த்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது.

ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தைத் தமிழர்கள் மத்தியில் நிலை நிறுத்துவது.

அரசியல் கைதிகளின் விரைவான விடுதலைக்கு அழுத்தம் தருவது.

தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, தமிழர்களுக்கும், தென் இலங்கையின் அரசியல் தலைமைகளுக்கும் இடையே பலமான இணைப்புப் பாலமாக விளங்குவது.

-முதலிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.