புதுடில்லி, ஜூலை 7 – துருக்கிய விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் வாசகம் காணப்பட்டதை அடுத்து அந்த விமானம் உடனடியாகப் புதுடில்லி விமான நிலையத்தில் இன்று அவசரமாகத் தரையிறங்கியது.
இந்தியாவின் தேசிய அதிரடிப் படைக் குழுவினர் உடனடியாக டில்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல் நோக்கிச் சென்று கொண்டிருந்த 148 பயணிகளும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அந்தத் துருக்கிய விமானம் இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் கழிவறையில் உள்ள கண்ணாடியில் “விமானச் சரக்குப் பகுதியில் வெடிகுண்டு” (bomb in cargo hold) என்ற வாசகத்தை விமானப் பணியாளர் ஒருவர் கண்டார்.
இதனைத் தொடர்ந்து விமானம் தரையிறக்கப்பட்டு, வெளியேற்றப்பட்ட பயணிகளிடம் தற்போது புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் விமானம் தரையிறக்கப்பட்டு, முழுவதுமான பரிசோதனை செய்யப்பட்டதில் எந்தவித வெடிகுண்டு அபாயமும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பெட்டிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
டில்லி விமான நிலையத்தில் மற்ற விமான சேவைகள் எதுவும் பாதிப்படையாமல் சுமுகமாக நடைபெற்று வருகின்றன என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கிய அரசாங்கத்திற்குச் சொந்தமான துருக்கி விமான நிறுவனம் ஐரோப்பாவிலேயே நான்காவது பெரிய விமான நிறுவனமாகும். கடந்த காலங்களில் பல வெடிகுண்டு மிரட்டல்களை இந்த விமான நிறுவனம் சந்தித்திருந்தாலும், அவை அனைத்தும் பொய்ச் செய்திகளாகவே இருந்தன.
இதற்கிடையில், நேற்று திங்கட்கிழமை மற்றொரு துருக்கி விமான நிறுவன விமானத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று காணப்பட்டதை அடுத்து, அந்த விமானம் வேறு தடத்திற்கு மாற்றிவிடப்பட்டது. பின்னர் அந்த விமானம் விமான நிலைய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு, தனது சேவையைத் தொடர்வதற்குத் தகுதியானதாக அறிவிக்கப்பட்டது என்றும் விமானத் துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
படங்கள்: EPA