Home இந்தியா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமாக உதவுங்கள் – டெல்லி காவல் துறை அறிவிப்பு!  

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமாக உதவுங்கள் – டெல்லி காவல் துறை அறிவிப்பு!  

541
0
SHARE
Ad

samaritans-647_071315054207புது டெல்லி, ஜூலை 13 – விபத்தில் யாரேனும் காயமடைந்து இருந்தாலோ, உயிர் போகும் நிலையில் துடித்துக் கொண்டிருந்தாலோ பெரும்பாலனவர்களுக்கு அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால், காவல்துறையினரின் துளைத் தெடுக்கும் கேள்விகளுக்கு பயந்தும், விபத்தில் பாதிக்கப்பட்டவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்டால், வழக்கு தொடர்பாக சாட்சியாக நீதிமன்றத்தில் நிற்க வேண்டுமோ? என்ற அச்சம் காரணமாகவும் பலர் இது போன்ற சமயங்களில் உதவாமல் ஒதுங்கி விடுகின்றனர்.

இந்நிலையில், டெல்லி காவல் துறை மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு ஒன்றை பொது மக்களுக்கு விடுத்துள்ளது. அந்த அறிக்கையில், “விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தைரியமாக உதவுங்கள். விசாரணையின் போது காவல் துறையினரால் நாம் சந்தேகிக்கப்படுவோமோ? என்கிற பயம் இனி உங்களுக்கு வேண்டாம். உங்களின் தனிப்பட்ட தகவல்களை விருப்பம் இருந்தால் மட்டும் காவல் துறையினரிடம் கொடுத்தால் போதும்”என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை டெல்லி காவல் துறை சிறப்பு ஆணையர் தீபக் மிஸ்ரா பொது மக்களிடமும், அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

காவல் துறை ஆணையரின் இந்த அறிவிப்பினை டெல்லி வாசிகள் வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வருவதற்கு சாத்தியமுள்ளதா? என்பது தெரியவில்லை. எனினும், இந்தியாவைப் பொருத்தவரையில் காவல்துறை என்பது பொது சேவைக்கான பணி என்பதைத் தாண்டி, அதிகார வர்க்கம் என்ற மனப்போக்கு பெரும்பாலான பொது மக்களிடம் நிலவி வருகிறது. அதனை மாற்ற வேண்டும் என்பதற்கான முதல் படியை டெல்லி எடுத்து வைத்துள்ளது.