சென்னை, ஜூலை 18- சென்னையில் விற்கப்படும் ஆவின் பாலில் மண்ணெண்ணெய் வாசம் வீசுவதாகவும், இதனால் அதில் மண்ணெண்ணெய் கலந்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
சென்னை நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வர் ராவ் என்பவர், அப்பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் நேற்று மாலை ஆவின் பால் உறை (பாக்கெட்) வாங்கியுள்ளார்.
அந்தப் பாலைக் காய்ச்சிக் குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு நெஞ்செல்லாம் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது.
உடனே அவர் ஆவின் பால் வாங்கிய கடைக்குச் சென்று இதுபற்றிச் சொல்லியிருக்கிறார். கடைக்காரர், உறைக்குள் இருக்கும் பாலிற்கு நான் உத்தரவாதம் தர முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
இதை அடுத்து அவர் ஆவின் நுகர்வோர் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் சரியான பதில் கிடைக்காததால், அடுத்து அவர், ஆவின் நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று புகார் கூறியிருக்கிறார்.
அந்தப் பால் உறைகள் சோழிங்கநல்லூர் கிளையிலிருந்து தயாரிக்கப்பட்டதால், உடனே அந்தக் கிளையிலிருந்து வந்த ஆவின் நிறுவன அலுவலர் பாலின் மாதிரிகளைச் சேகரித்துச் சென்றுள்ளார்.
இதேபோல், சென்னையின் பல பகுதிகளில் வாங்கிய பால் பாக்கெட்டில், மண்ணெண்ணெய் கலந்திருப்பதாக மேலும் சிலரும் புகார் தெரிவித்துள்ளனர்.