கோலாலம்பூர், ஜூலை 19 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிரான தமது குற்றச்சாட்டுகளை துன் மகாதீர் நிரூபிக்க வேண்டுமென மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு அறிவுறுத்தி உள்ளார்.
முன்னாள் பிரதமரான மகாதீர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது அவருக்கு அழகல்ல என்றும் மஇகா முன்னாள் தேசியத் தலைவரான சாமிவேலு கூறியுள்ளார்.
பிரதமரின் திறந்த இல்ல உபசரிப்பில் சாமிவேலு…
“டாக்டர் மகாதீர் எதைச் சொன்னாலும், அதற்குரிய ஆதாரங்களை அளிக்க வேண்டும். அடுத்தவர் மீது குற்றம்சாட்ட அவர் விரும்புவாரேயானால் உரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் அவை சரியானவையா, இல்லையா என்பதை நாம் பார்க்க முடியும்,” என பிரதமர் நஜிப்பின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் சாமிவேலு தெரிவித்தார்.
பிரதமரை விடுப்பில் செல்லுமாறு மகாதீர் கூறுவது சரியல்ல என்று குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு முறையும் ஏதேனும் நிகழும்போது பிரதமர் விடுப்பில் செல்ல வேண்டும் என்கிற கோரிக்கை எழுமானால், நாட்டை காப்பாற்ற இயலாது என்றார்.
“பிரதமர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்கு தொடர வேண்டும். பிரதமர் அதில் வெற்றி காண்பார் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார் சாமிவேலு.