கோலாலம்பூர், ஜூலை 22 – அரசியல் தந்திரங்களுக்கு இரையாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டுமென ஜோகூர் மக்களுக்கு அம்மாநில இளவரசர் அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், விரைவாகவும், சரியாகவும் முடிவெடுப்பதில் மக்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டுமென்று துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
“பொய்கள் உண்மைகயைப் போல் தெரியவும், மதிப்பிற்குரியவற்றை படுகொலை செய்யவும் உருவாக்கப்பட்டதே அரசியல் மொழி,” என ஜோகூர் சதர்ன் டைகர்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது பதிவில் கூறப்பட்டுள்ளது.”
“பொது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அரசியல் தந்திரங்கள் குறித்து ஜோகூர் மக்களுக்கு புரிய வைப்பதே நோக்கம்.”
“அதிகாரத்திற்காகவும், சுய லாபங்களுக்காகவும் சிலர் வஞ்சகர்களாக மாறுவது தான் மிக ஆபத்தான, அச்சுறுத்தக்கூடிய விஷயம். இதை மக்கள் புத்திசாலித்தனத்துடன் ஆராய வேண்டும். அரசியல் தந்திரங்கள் மற்றும் குழப்பங்களில் ஜோகூர் சிக்கிவிடக்கூடாது,” என இளவரசர் மேலும் தெரிவித்துள்ளார்.