லண்டன், ஜூலை 22- லண்டனைச் சேர்ந்தவர் கர்ட்னி ஸ்டீவர்ட் என்ற இளம் பெண். வயது 21.
இவர் தனது இரண்டரை வயது மகனைச் சலவை எந்திரத்திற்குள் (வாஷிங் மெஷினுக்குள்) திணித்து அதைப் புகைப்படம் எடுத்துத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்தப் படத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்துச் சிலர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் அந்தப் பெண்ணை அழைத்து விசாரணை நடத்திய போது,”என் மகனுக்கு வாஷிங்மெஷின் என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்கு விளையாட்டுக் காட்டவே வாஷிங் மெஷினுக்குள் போட்டுப் படம் எடுத்தேன். அப்போது வாஷிங்மெஷினின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.
என் மகன் செய்யும் குறும்பை நகைச்சுவையாக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவே முகநூலில் வெளியிட்டேன். மற்றபடி இதில் எந்த உள் நோக்கமும் இல்லை. என் மகன் நன்றாக இருக்கிறான்” என்று சொன்னார்.
மேலும், அவர் இந்தச் செயலுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோரினார். அதனால், காவல்துறையினர் அவர் எச்சரித்து அனுப்பினர்.
விளையாட்டு தான் என்றாலும், எதில் விளையாடுவது என்று ஒரு வரன்முறை வேண்டாமா? இளைய தலைமுறையினரின் முகநூல் மோகம் எங்கோ போய்க் கொண்டிருக்கிறது. முகநூலில் எதை வேண்டுமானாலும் பகிரலாம் என்னும் எண்ணம் வலுத்துவிட்டது. இந்த வக்கிரமான போக்கு நல்லதற்கல்ல!