சென்னை, ஜூலை 22- நடிகர் சங்கத் தேர்தலை மனதில் வைத்து விஷால், நடிகர் சங்க நிர்வாகம் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நடிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடிகர் ஜே.கே.ரித்தீஷ், நல்ல மனதோடு வழங்கிய உதவிகளைக் கூட விஷால் திரித்துத் தவறாகக் கூறி வருவதாக நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.என்.காளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் கே.என்.காளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்த ஜே.கே.ரித்தீஷ், தனது சொந்தப் பணத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்குப் பல உதவி களைச் செய்துள்ளார். அந்த வகையில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்துக்குத் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1.5 லட்சத்தைக் கடந்த 2007-ம் ஆண்டு வழங்கியுள்ளார். அதேபோல 2008-ம் ஆண்டு அனைத்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி, சேலைகள் வழங்கினார்.
இதை நடிகர் சங்கம் சார்பாக எல்லா மாவட்ட நாடக நடிகர் சங்கங்களுக்கும் நாங்கள் சென்று வழங்கினோம். அந்தக் காலகட்டத்தில் பல நலிந்த நடிகர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை போன்றவற்றை அவர் நேரடியாக வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளைக்கோ, நடிகர் சங்கத்துக்கோ அவர் எந்த நிதியும் வழங்கவில்லை.
நல்ல மனதோடு அவர் வழங்கிய அந்த உதவிகளை தேர்தல் பிரச்சாரத்துக்காகத் தற்போதைய நிர்வாகத்தின் தவறான செய்திகளைப் பரப்ப விஷால் பயன்படுத்துகிறார். இது கண்டிக்கத்தக்கது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”. என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலை மையமாகக் கொண்டு, சரத்குமார் அணியினரும் விஷால் அணியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவது தொடர்கதையாகியுள்ளது. இது எப்போது முற்றும் என்று தெரியவில்லை.