சென்னை, ஜூலை 23 – திமுக தலைவர் கருணாநிதி, சமீபத்தில் வெளியிட்ட மதுவிலக்கு குறித்த அறிக்கை, தமிழக கட்சிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 4 வயது குழந்தை, மதுகுடித்த காணொளி இணைய தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய சமயத்தில் கூட மதுவிலக்கு குறித்து வாய் திறக்காத கருணாநிதி, திடீர் என அவசர அவசரமாக மதுவிலக்கு அறிக்கை வெளியிட்டதன் பின்னணி என்ன? என்று நீடித்து வந்த குழப்பத்திற்கான விடை தற்போது அம்பலமாகி உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்கள், அரசியல்வாதிகளின் எதிர்ப்புகள் என எதுவும் அசைத்துப் பார்க்க முடியாத தமிழக அரசின் மதுக்கொள்கையை, கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 4 வயது சிறுவன் மது அருந்தும் காணொளி அசைத்துப் பார்த்துவிட்டது. இதற்கு மேலும், மதுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால், 2016-ம் ஆண்டு தேர்தலை அது கண்டிப்பாக பாதிக்கும் என்பதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, ‘டாஸ்மாக்குகளின்’ (Tasmac) நேரத்தை குறைப்பது பற்றியும், கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது பற்றியும் சமீபத்தில் முக்கிய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு குறித்து அரசு அறிவிப்பதற்கு, முன்பாகவே தி.மு.க அவசர அவசரமாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டி மதுவிலக்கு வாக்குறுதியை வெளியிட்டது. கருணாநிதியின் இந்த அறிவிப்பு, அ.தி.மு.க தலைமையையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முன்கூட்டியே எப்படி எதிர்க்கட்சிக்கு தெரியவந்தது என ஜெயலலிதா, தனது கட்சியினரை கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதிமுக-வின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டால் மக்கள் மத்தியிலும், எதிர்கட்சிகளிடமும் ஆதரவு பெருகும் என்பதே திமுக-வின் திட்டமாகும். அதில் திமுக-வும் ஓரளவிற்கு வெற்றி பெற்று விட்டது.
இதற்கிடையே, அதிமுக எடுக்கும் முடிவுகள் பற்றி எதிர்க்கட்சிகளிடம் தகவல் சொல்வது யார்? என்பது குறித்து அதிமுக தலைமை ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நடந்த விசாரணையின் முதற்கட்ட தகவலில், கடந்த ஆட்சியில் முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள், தற்போதும் முக்கிய பதவிகளில் தான் உள்ளனர். அவர்கள், மூலம் தான் அதிமுக-வின் ரகசியங்கள் வெளியாகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களை பயன்படுத்தி, தகவல்களை முன்னதாக அறிந்து கொள்ளும், கருணாநிதி மற்றும் ஸ்டாலின், அறிவிப்பு வெளியாவதற்கு முன், கோரிக்கை வைக்கின்றனர். அறிவிப்பு வெளியான பின், தங்கள் முயற்சியால் தான் அது நடந்தது என்கின்றனர். இந்த விவகாரம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.