கோலாலம்பூர், ஜூலை 25 – தங்களது இரண்டு பதிப்புகளான ‘த எட்ஜ் வீக்லி’, ‘த எட்ஜ் பினான்சியல் டெய்லி’ ஆகியவற்றிற்கு ஜூலை 27-ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் தடை விதித்தாலும், இணையதளம் வழியாக தங்களது செய்திகளைப் படிக்கலாம் என ‘த எட்ஜ்’ குழுமம் அறிவித்துள்ளது.
இது குறித்து ‘த எட்ஜ்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹோ காய் தட் கூறுகையில், ‘த எட்ஜ்’ நிறுவனத்தின் இணையதளங்களான ‘theedgemarkets.com’, ‘theedgeproperty.com’,themalaysianinsider.com and edgy.com ஆகியவற்றின் வழியாக வாசகர்கள் எங்களது செய்திகளைப் படிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
1எம்டிபி விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ‘த எட்ஜ் வீக்லி’ மற்றும் ‘த எட்ஜ் பினான்சியல் டெய்லி’ ஆகிய இரு பதிப்புகளுக்கும் மூன்று மாதங்கள் இடைக்காலத் தடை விதித்து நேற்று உள்துறை அமைச்சு உத்தரவிட்டது.
1 எம்டிபி விவகாரத்தில், இரு பதிப்புகளிலும் வெளியிடப்பட்ட செய்தி, மக்களுக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிக்கும் வகையில் அமைந்துவிட்டதாக உள்துறை அமைச்சு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.