வாஷிங்டன், ஜூலை 25 – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
அதற்கு முன்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கென்யாவைப் பார்வையிடும் முதல் அமெரிக்க அதிபர் என்ற முறையில் மிகவும் பெருமை அடைகின்றேன். அங்கு குடும்பத்தினரையும், இளம் கென்யர்களையும் கண்டு அவர்களின் எதிர்காலம் குறித்து பேசவிருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
கென்யாவில் பிறந்தவரான ஒபாமாவின் தந்தை, பட்ட மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற போது கன்சாசில் ஒபாமாவின் தாயார் ஆன் துர்காமை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒபாமா பிறந்த பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு கென்யா சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது.
ஒபாமா தனது தாயாருடன் அமெரிக்காவில் தங்கிவிட்டார். அதன்பிறகு, கென்யாவில் ஒபாமா தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் அதிபரான பிறகு ஒபாமா, முதன் முறையாக தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
அதற்கு முன்பு கடந்த 1988–ம் ஆண்டில் தனது 28–வது வயதில் அங்கு சென்றபோது, அவரது தந்தை அங்கு உயிருடன் இல்லை. கார் விபத்து ஒன்றில் மரணம் அடைந்து விட்டார்.
தற்போது ஒபாமா கென்யா வருகையையொட்டி தலைநகர் நைரோபியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏனெனில் கென்யாவில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் கிளையான அல்–ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அங்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, நைரோபியில் வர்த்தக நிறுவனங்கள், போக்குவரத்துகள் அனைத்தும் மூடப்பட்டுகின்றன.
சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.