Home நாடு எம்எச்17 பேரிடர்: சமரசத்துக்கான வழிகளை ஆராயத் தயார் – ரஷ்ய தூதர்

எம்எச்17 பேரிடர்: சமரசத்துக்கான வழிகளை ஆராயத் தயார் – ரஷ்ய தூதர்

574
0
SHARE
Ad

mh17கோலாலம்பூர், ஜூலை 25 – எம்.எச்.17 பேரிடர் தொடர்பில் அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த விவகாரத்தில் சமரசத்துக்கான மாற்று வழிகளை ஆராய ரஷ்யா தயாராக உள்ளது.

இப்பேரிடருக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என கூட்டு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள மலேசியா உள்ளிட்ட 5 நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும் இது தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானம் எண் 2166இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கூறுகள் பூர்த்தி செய்யப்படவில்லை என மலேசியாவுக்கான ரஷ்ய தூதர் டாக்டர் வெலேரி யெர்மோலோவ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தில் அனைத்துலக தீர்ப்பாயம் அமைக்கக் கோரிவதில் அவசரம் காட்டப்படுவதாக நாங்கள் கருதுகிறோம். எனினும் மலேசியாவுடனான கருத்து வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டு வர தயாராக உள்ளோம். இவ்விவகாரத்தில் மாற்று வழிகளை ஆராய மலேசியா தயாராகவே உள்ளது.

இதேபோல் கூட்டு புலனாய்வுக் குழுவில் உள்ள வேறு சில உறுப்பினர்களும் மாற்று வழிகளை ஆராய சம்மதித்துள்ளனர்,” என்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெலேரி யெர்மோலோவ் கூறினார்.

அந்த மாற்று வழிகள் என்னென்ன என்பதை தெரிவிக்க மறுத்த அவர், அவை மிகுந்த ரகசியமானவை என்றார்.

எம்எச் 17 பேரிடர் தொடர்பில் உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமாயின் அனைத்துலக தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என மலேசியா வலியுறுத்துவதாகவும், இதற்கு கூட்டு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம் மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

எனினும் ஐ.நா., மன்றத்தில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளில் ஒன்றான ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“ஐ.நா., தீர்மானம் எண் 2016ல் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை பூர்த்தி செய்யாமாலும், இந்த சம்பவத்துக்கு யார் காரணம் என்பதை தெளிவுபடுத்த உரிய வலுவான ஆதாரங்கள் இல்லாமலும் முன்கூட்டியே தீர்ப்பாயம் அமைக்க் கோருகின்றனர். மேலும் கூட்டு புலனாய்வுக் குழு வெளிப்படையற்ற தன்மையில் செயல்படுகிறது. நாங்கள் கேட்ட பல விவரங்கள் இன்னும் அளிக்கப்படவில்லை.

“உதாரணமாக செயற்கைக்கோள் படங்களை தருமாறு அமெரிக்காவிடம் கேட்டோம். குறிப்பிட்ட பேரிடர் பகுதியை அவர்கள் கண்காணிப்பது எங்களுக்குத் தெரியும். ஆனாலும் அப்படங்கள் இன்னும் கிடைக்கவில்லை,” என்றார் வெலேரி யெர்மோலோவ்.