இடுக்கி, ஜூலை 25- கேரள மாநிலம் இடுக்கியிலுள்ள மருத்துவமனையில் சன்னல் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட குழந்தை, ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
இடுக்கிக்கு அருகிலுள்ள தொடுபுழா என்னும் ஊரைச் சேர்ந்த ரஹீம் என்பவருடைய தாயார் உடல்நலக்குறைவு காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் காண, தனது மனைவியுடனும், தனது இரண்டு வயது மகன் முகமதுடனும் மருத்துவமனைக்கு வந்தார் ரஹீம்.
அப்போது, அங்கிருந்த சன்னல் வழியே குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார் ரஹீமின் மனைவி. அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை சன்னல் கம்பிகளுக்கு இடையே மாட்டிக் கொண்டது. அது குறுகலான கம்பி என்பதால், குழந்தையின் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
குழந்தையும் பயத்தில் அழுதபடி தலையைத் திருப்பிக் கொண்டதால், கம்பிகள் குழந்தையின் கழுத்தை இறுக்க ஆரம்பித்தன. இதனால், வலி தாங்காமல் குழந்தை கதறத் தொடங்கியது.
குழந்தையின் தாயும் தனது குழந்தையைக் காப்பாற்றும்படி கதறித் துடித்தார் .ரஹீம் போராடிப் பார்த்தும் குழந்தையின் தலையைப் பத்திரமாக வெளியே எடுக்க முடியவில்லை.
அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் அங்கே ஓடிவந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் போராடி சன்னல் கம்பிகளை மெதுவாகத் துண்டித்து, குழந்தையின் தலையைப் பத்திரமாக வெளியே எடுத்தனர். அதற்குள் குழந்தை கதறிக் கதறி மயங்கும் நிலைக்கு வந்துவிட்டது.
இச்சம்பவத்தால், அந்த மருத்துவமனை ஏறக்குறைய ஒரு மணி நேரம் பதற்றமாகக் காணப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில், பால்கனியில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிய குழந்தையைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு தொழிலாளிகள் உயிரைப் பணயம் வைத்துக் குழாய் வழியாக மாடிக்கு ஏறி, அந்தக் குழந்தையைப் பத்திரமாக மீட்ட சம்பவம் அனைவருடைய பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமையாகும்.கவனக்குறைவால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடக்கக் கூடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.