பெய்ஜிங், ஜூலை 27 – சீனாவில் வணிக வளாகம் ஒன்றின், நகரும் படிக்கட்டில் சிக்கி சீனப்பெண் ஒருவர், பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வணிக வளாகத்தின் கண்காணிப்பு கேமராவில், அக்காட்சி பதிவாகி உள்ளது. தான் இயந்திரத்தில் சிக்கிக் கொண்ட அந்த தருணத்திலும், தன் குழந்தையை காப்பாற்றிய அந்த தாயின் தியாகம் காண்போரை பதறவைக்கிறது.
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹூபேய் மாகாணத்தின், ஜிங்ஷுவ் நகரில், இளம்பெண் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார். வளாகத்தின் கீழ் தளத்தில் இருந்த அவர், மேல் தளத்திற்கு வருவதற்காக குழந்தையுடன் நகரும் படிக்கட்டில் (Escalator) ஏறியுள்ளார். படிக்கட்டு சாதாரணமாக மேல்தளத்தை அடைந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, நகரும் படிக்கட்டின் முகப்பு பகுதியில் அந்த பெண் கால் வைத்தவுடன் அது உடைந்து விழுந்தது.
கணநேரத்தில் சுதாரித்துக் கொண்ட அப்பெண், படிக்கட்டின் மேல் நின்று கொண்டிருந்த பெண்களிடம் தனது குழந்தையை தள்ளிவிட்டார். குழந்தையை அந்த பெண்கள், பிடித்துக் கொண்டாலும், அப்பெண்ணை அவர்களால் பிடிக்க முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் அப்பெண் இயந்திரத்திற்குள் சென்று விட்டார். உடனடியாக நகரும் படிக்கட்டின் இயக்கம் நிறுத்தப்பட்டது. எனினும், அந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், நகரும் படிக்கட்டின் பராமரிப்பு பணிகள் அப்பெண் வருவதற்கு முன்பு தான் முடிந்துள்ளது. பணியாளர்கள் கவனக்குறைவாக முகப்புப் பகுதியின் திருகாணியை (Screw) பொருத்துவதற்கு மறந்துள்ளனர். அதன் காரணமாகவே முகப்புப் பகுதி உடைந்து அப்பெண் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காணொளியைக் கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=uiV98x8ZiFA