சென்னை, ஜூலை 27- தூங்காவனம் படத்தின் வெளியீட்டு உரிமையைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கக் கமல் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தம வில்லன் படத்தைத் தயாரித்துப் பெரும் நட்டத்தைச் சந்தித்த திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, நட்டத்தை ஈடுகட்ட அடுத்து ஒரு படம் அவரது நிறுவனத்திற்கு நடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி, தூங்காவனம் படத்திற்கு அடுத்து, 30 கோடியில் முதல் பிரதி அடிப்படையில் ஒரு படம் எடுத்துத் தர ஒத்துக் கொண்டு, அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார் கமல்.
இந்நிலையில், ‘தூங்காவனம்’ படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டு, அடுத்த படமான ‘தலைவன் இருக்கின்றான்’.படத்தைத் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கலாம் எனக் கமல் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
கமலிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராஜேஷ் இயக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்த உடன் படத்தின் செலவுத் தொகையைக் கணக்கிட்டுவிட்டு, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு அதன் முழு உரிமையையும் அளித்து விடலாம் என்பது கமலின் திட்டமாம்!