Home அரசியல் அன்வாரைப் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து பணம்?- வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை அம்பலம்!

அன்வாரைப் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து பணம்?- வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை அம்பலம்!

777
0
SHARE
Ad

Anwar-Ibrahim-Slider---1மார்ச் 9 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து சில அமைப்புக்கள் செயல்பட்டதாகவும் அதற்காக சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் புகழ்பெற்ற வர்த்தக சஞ்சிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) பத்திரிக்கை, அதிர்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது. மார்ச் 8 தேதியிட்ட தனது வார இறுதிப் பதிப்பில் அந்தப் பத்திரிக்கை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பணம் கொடுத்ததாக டிரெவினோவின் வாக்குமூலம்

வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தனது செய்திக் கட்டுரையில் தொடர்ந்து கூறியிருப்பதாவது;-

#TamilSchoolmychoice

“கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிலுள்ள இணையத்தள எழுத்தாளர் ஜோஷூவா டிரெவினோ (Joshua Trevino) என்பவர் 2008 ஆம் ஆண்டுக்கும் 2011 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தனக்கு அமெரிக்க வெள்ளி 389,724-70 கொடுக்கப்பட்டதாகவும், தான் மலேசியாவுக்கு இலவசமாக வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் மலேசிய அரசாங்கத்திற்கு பொது உறவு மற்றும் தகவல் ஊடக ஆலோசனைகள் வழங்குவதற்கு தனக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

“இந்தபணத்தைக் கொண்டு “மலேசியா மேட்டர்ஸ்” (Malaysia Matters) என்ற இணையத்தள பக்கம் ஒன்றை உருவாக்கி எழுதப்பட்டது என்பதுடன், மேலும் 130,950 அமெரிக்க வெள்ளி மலேசிய அரசாங்கம் சார்பாக மற்ற பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும் எழுதக்கூடிய மற்ற எழுத்தாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மலேசியா மேட்டடர்ஸ் இணையத்தளம் தற்போதுசெயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.”

இவ்வாறு எழுதுவதற்கும் செயல்படுவதற்கும் மலேசியாவிலிருந்து யாராவது நிதி கொடுத்தார்களா என்று 2011ஆம் ஆண்டில் பொலிடிகோ வெப்சைட் (Politico Website) என்ற இணையத் தளம் கேள்வி தொடுத்தபோது டிரெவினோ அதை மறுத்திருக்கின்றார்.

ஆனாலும் டிரெவிடோவின் இணையத்தள பக்கத்தில் குறிப்பாக அன்வாரைக் குறிவைத்தும் அவருக்கு எதிரான கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டன.

அன்வார் தெரிவித்த யூத எதிர்ப்புக் கருத்துக்கள் பாஸ் கட்சியுடனான அவரது உறவுகள் குறித்தும் அனைத்துலக பயங்கரவாதிகளுடன் அன்வார் தொடர்பு வைத்துள்ளார் என்றுகூட நம்ப முடியாத செய்திகள் இந்த இணையப் பக்கங்களில் எழுதப்பட்டது.

அது மட்டுமல்லாமல், அன்வார் மீது இரண்டாவது முறையாக ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டுக்களை மலேசிய அரசாங்கம் கொண்டு வந்தபோது அதைத் தற்காத்தும் இந்த இணையப் பக்கத்தில் எழுதப்பட்டது. அவ்வாறு அன்வார் குற்றஞ்சாட்டப்பட்டது தவறு என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சும், வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையும் சுட்டிக் காட்டியபோது, அந்த முடிவுகளை கடுமையாக விமர்சித்தும் இந்த இணையப் பக்கத்தில் எழுதப்பட்டது.

அன்வாருக்குஆதரவாக இருந்த அமெரிக்க அரசாங்க தரப்பினரைக் குழப்புவதற்காகவும் அவர்களின் மனங்களில் சந்தேகத்தை விதைப்பதற்காவும் குறிவைத்து இந்த இணையப்பக்கத்தில் எழுதப்பட்டது

அன்வார் யூதர்களுக்கு எதிர்ப்பானவர் என்றும் கோழையானவர்,  பெண்களை மோசமாக நடத்துபவர் என்றும் எழுதப்பட்டது.

ஒரு கட்டுரையில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் (Muslim Brotherhood) பயங்கரவாதம் தொடர்புடைய பணம் அன்வாருக்கு செல்கின்றது என்றும் எழுதப்பட்டது.

டிரெவினோவின் இணையப் பக்கம் பெரும்பாலும் அன்வாரைக் குறிவைத்து அவரைத் தாக்கி எழுதியது. சவுதி அரேபியாவிலிருந்து பணம் பெற்ற அமைப்புக்களுடன் அன்வார் தொடர்பு வைத்திருக்கின்றார் என்றும் எழுதப்பட்டது.

இருப்பினும் பயங்கரவாதத்துடன் அன்வார் தொடர்பு வைத்திருக்கின்றார் என்பது அபாண்டமான நம்பமுடியாத கருத்தாகும்.

அன்வாரைப் பற்றி எதிர்த்து எழுதிய மற்றவர்களுக்கும் பணம்

டிரெவினோ தான் எழுதிய பிரச்சாரக் கருத்துக்களைப் பிரதிபலித்த எழுத்தாளர்களுக்கும், மற்ற எழுத்தாளர்களுக்கும்கூட பணம் கொடுத்திருக்கின்றார். ஆனால் இந்த எழுத்தாளர்களுக்கு மலேசியாவைப் பற்றி எதுவும் தெரியாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பென் டோமினிக் (Ben Domenech) என்பவர் ஆசிரியராக இருந்து நடத்தும் தெ நியூ லெட்ஜர் (The New Ledger) என்ற இணையப்பக்கத்தில் அன்வாரைப் பற்றி மிகவும் மோசமான செய்திகள் வெளியிடப்பட்டன.

டிரெவினோவின் கூற்றுப்படி கருத்தாய்வு எழுத்துக்காக டொமினிக் என்ற எழுத்தாளருக்கு 36,000 அமெரிக்க வெள்ளி கொடுக்கப்பட்டதாக கூறியிருக்கின்றார்.

இந்த நியூ லெட்ஜர் இணைய தளத்தில் அன்வாருக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்த ரெச்சல் மொட்டே (Rachel Motte) , கிறிஸ்தோபர் பேடியுக் (Christopher Badeaux) மற்றும் பிராட் ஜேக்சன் (Brad Jackson) ஆகிய மூன்று எழுத்தாளர்களுக்கு முறையே தலா 9,500, 11,000 மற்றும் 24,700 அமெரிக்க வெள்ளி வழங்கப்பட்டிருக்கின்றது.

அப்கோ பணம் கொடுத்தது

டிரெவினோவுக்கு ஆரம்பத்தில் பணம் கொடுத்த அமைப்பு பன்னாட்டு நிறுவனமான அப்கோ வேர்ல்வைட் (APCO Worldwide) ஆகும்.

இந்த அப்கோ நிறுவனத்துக்கும் மலேசிய அரசாங்கத்துக்கும் பொது உறவு விவகாரங்கள் குறித்த நீண்டகால அடிப்படையிலான ஒப்பந்தம் இருக்கின்றது என்பதோடு, சில மாதங்களுக்கு முன்னால் இந்த அப்கோ நிறுவனத்தை ஆலோசகராக நியமித்ததற்காக மலேசியாவில் பலத்த சர்ச்சைகள் எழுந்ததும் நினைவிருக்கலாம்.

கோலாலம்பூரில் இயங்கி வரும் அப்கோ நிறுவனத்தில் 2010ஆம் ஆண்டு வாக்கில் வேலை செய்து வந்த பால் ஸ்டேட்லென் (Paul Stadlen) தற்போது பிரதமர் நஜிப்பின் அலுவலகத்தில் நேரடியாக வேலை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த பொது உறவு நிறுவனத்தை நடத்தி வந்த டேவிட் ஆல்  (David All) என்பவர் மலேசியா மேட்டர்ஸ் இணையத் தளத்துடன் இணைந்து செயல்பட்டதோடு அதற்கு பணமும் தந்திருக்கின்றார்.

ஆனால் 2009 க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் மலேசியாவிலிருந்து வந்த பணமெல்லாம் பேக்ட் பேஸ்ட் கொம்யூனிகேஷன்ஸ் (Fact-based Communications) என்ற நிறுவனத்தின் மூலமாக வந்திருக்கின்றது.

பத்திரிக்கையாளரான ஜோன் டெப்ட்ரியோஸ் (John Defterious) என்பவரின் தலைமையின் கீழ் இந்த பேக்ட் பேஸ்ட் நிறுவனம் இயங்கியது. இந்த நிறுவனம் சிஎன்என் (CNN), சிஎன்பிசி (CNBC), பிபிசி (BBC)  போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தங்களின் வாடிக்கையாளர் நாடுகளில் நிகழ்ச்சிகளைத் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த நிறுவனமாகும்.

இந்த தகவல் 2011இல் வெளியிடப்பட்டபோது மேற்கூறப்பட்ட மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களும் பேக்ட் பேஸ்ட் கம்யூனிகேஷன்ஸ் தயாரித்துக் கொடுத்த நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்தன.

மறைமுக, கீழறுப்பு அரசியல்

ஒரு சாராருக்கு ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ கருத்தாய்வுகளை உருவாக்குவதற்கும் எழுதப்பட வைப்பதற்கும் செல்வாக்கை பயன்படுத்துகின்ற முயற்சிகள் அமெரிக்க மண்ணிற்கும் அமெரிக்க அரசியலுக்கும் புதிதல்ல.

தங்களின் சொந்த நாடுகளில் அடக்குமுறைகளைப் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்காவோடு நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொள்ள இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்பதோடு இதற்காக  பிரபலம் அல்லாத – பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்காத -எழுத்தாளர்களைக் கொண்டு தங்களுக்கு சாதகமான கருத்தாய்வுகளை உருவாக்குவதற்கு ஏராளமான பணத்தை செலவு செய்கின்றன.

ஆனால் மலேசியாவிலிருந்து புறப்பட்ட இந்த வியூகத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டவர்கள்  அமெரிக்க எழுத்துலகிலும், பத்திரிக்கைத் துறையிலும் மரியாதைக்குரியவர்களாக மதிக்கப்பட்டவர்களை பயன்படுத்திக் கொண்டதுதான்.

உதாரணமாக மதிப்பு மிகுந்த எழுத்தாளர்கள் ரேச்சல் எஹ்ரன்பீல்ட் (Rachel Ehrenfeld) என்பவருக்கு 30,000, கிளேர் பெர்லின்ஸ்கி (Claire Berlinski) என்பவருக்கு 6,750 மற்றும் சேத் மாண்டல் (Seth Mandel) என்பவருக்கு 5,500 என அமெரிக்க பணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஒரு சில கட்டுரைகள் பிரபலமான சஞ்சிகைகளான நேஷனல் ரிவியூ (National Review) வாஷிங்டன் டைம்ஸ் (Washington Times)  போன்ற பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மலேசியப் பிரதமர் நஜிப்பின் பிரபல்யம் இறங்குமுகமாக இருப்பதால் பிரதமராக அவர் தொடரக் கூடிய நாட்கள் எண்ணபடுகின்றன என்று கூறலாம்.

இதில் முரண்பாடான அம்சம் என்னவென்றால் தனக்கு முந்தைய பிரதமர்களை விட மிகவும் பரந்த ஜனநாயகப் பண்புகளைக்  கடைப் பிடித்ததோடு, அந்த வட்டாரத்தில் பொறுப்பான கடமைகளையும் அவர் ஆற்றியிருக்கின்றார்.

எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் போது மலேசியாவை நஜிப் சரியான பாதையில் செலுத்திக் கொண்டிருக்கின்றார் என்பதை அவர்கள் நேரடியாகவே ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள்

அதனால் நஜிப் ஒரு முறையான சட்டபூர்வமான பொது உறவு அமைப்பின் மூலம் இணைந்து செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம்.

மாறாக, எதிர்க்கட்சிகளின் செல்வாக்கை சிதைக்க மறைமுகமான, கீழறுப்பு செயல்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக நஜிப்பிற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்மாறான விளைவுகளே ஏற்பட்டிருக்கின்றன”

-மேற்கண்டவாறு வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தனது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றது.