மொரீஷியஸ், ஆகஸ்டு 4- காணாமல் போன மலேசியாவின் எம் எச் 370 விமானத்தினை இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் முயற்சியில் மொரீஷியஸும் இணைந்து செயல்படும் என்று மொரீஷியஸ் அரசு அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டு மார்ச் மாதம் மாயமாய் மறைந்து போன மலேசிய விமானம் எம் எச் 370-ன் சிதைந்த பாகம் தான், இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியாகிய ரீயூனியன் தீவில் கரை ஒதுங்கியுள்ளது என்று நம்பப்படுவதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மீண்டும் தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மொரீஷியஸ் தீவும் இத்தேடுதல் பணியில் மலேசியாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கையில் நாட்டின் கடலோரக் காவல்படையின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும், கடலில் உடைந்த பாகங்கள் ஏதேனும் காணப்பட்டால் அதுகுறித்துக் காவல்துறையினரிடம் தெரியப்படுத்துமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் மொரீஷியஸின் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.