Home Featured நாடு ‘சரவாக் ரிப்போர்ட்’ நிறுவனர் கிளேர் பிரவுனை கைது செய்யும் ஆணை – மலேசியக் காவல் துறை...

‘சரவாக் ரிப்போர்ட்’ நிறுவனர் கிளேர் பிரவுனை கைது செய்யும் ஆணை – மலேசியக் காவல் துறை பெற்றது

1032
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – சரவாக் ரிப்போர்ட் இணையத் தளத்தின் நிறுவனரான கிளேர் ரியுகாசல் பிரவுனுக்கு (படம்) எதிராக மலேசியக் காவல் துறை, மலேசியக் குற்றவியல் பிரிவு 124B மற்றும் 124-I, ஆகியவற்றின் கீழ் கைது ஆணையை நீதிமன்றத்தில் பெற்றது.

Clare-Rewcastle-Brownபிரிவு 124B-இன்படி, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

பிரிவு 124-I பொய் அறிக்கைகளை பரப்புவதைக் குற்றமாக்குகின்றது. இந்தக் குற்றச்சாட்டில் நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

#TamilSchoolmychoice

sarawak-report_1mdb_600மலேசியக் காவல்துறை கைது ஆணையைப் பெற்றதைத் தொடர்ந்து அவரது பெயர் இனி அனைத்துலக அளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெறும். INTERPOL Red Notice என்று அழைக்கப்படும் இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல் துறையின் சிவப்புப் பட்டியலில் கிளேர் பிரவுனின் பெயரைப் பட்டியலிடவும், ஆசியான் காவல் துறையின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் அவரது பெயரைப் பட்டியலிடவும், இனி மலேசியக் காவல்துறை முயற்சி மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலண்டனில் இருந்து இயங்கும் புலனாய்வு இணையத்தளமான சரவாக் ரிப்போர்ட்டை நிறுவியவர் கிளேர் பிரவுன். 1எம்டிபி குறித்தும், மற்ற மலேசிய ஊழல் விவகாரங்கள் குறித்தும் சரவாக் ரிப்போர்ட் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது.

மேலும் ரேடியோ ஃபிரீ சரவாக் என்ற வானொலி நிலையத்தையும் கிளேர் பிரவுன் நிறுவியுள்ளார். இவர் சரவாக்கில் பிறந்தவராவார்.

கிளேர் பிரவுன், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனின் தம்பியின் மனைவியுமாவார்.

எனவே, அவருக்கு எதிரான கைது ஆணையின் மூலம் மலேசியா-பிரிட்டன் இடையிலான தூதரக நல்லுறவுகளுக்கும் பாதிப்பு வருமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட்டதற்காகவும், நாட்டின் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய காரணத்தாலும், கடந்த ஜூலை 20ஆம் தேதி, மலேசிய அரசாங்கத்தின் தொடர்பு, பல்ஊடக ஆணையம்  சரவாக் ரிப்போர்ட் இணையத்தளத்தை முடக்கியது.

இருப்பினும் நவீன இணையத் தள தொழில்நுட்பத்தின் மூலம் சரவாக் ரிப்போர்ட் மற்ற தளங்களிலிருந்து தடையின்றி இயங்கி வருகின்றது.